கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தில் 70.77 மில்லியன் ரூபா செலவில் கல்வி வேலைத்திட்டங்கள்

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேசத்தில் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஐம்பது வேலைத்திட்டங்கள் 70.77 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

கிளிநொச்சி கல்வி வலயத்தின் கண்டாவளைக் கல்விக் கோட்டத்தில் உள்ள 24 பாடசாலைகளில் சுமார் 5,386 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இப்பாடசாலைகளில் 348 வரையான ஆசிரியர்கள் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த பாடசாலைகள் பல்வேறு தேவைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.

குறிப்பாக குடிநீர் வசதி, மலசலகூட வசதி, வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள் இன்மை போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலைகள் இயங்கி வந்தன. எனினும் தற்போது பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அருகிலுள்ள உள்ள பாடசாலை சிறந்த பாடசாலையென்ற அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 18 பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டடங்களை திருத்துதல், 13 பாடசாலைகளில் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், 09 பாடசாலைகளுக்கு மின்சார வசதிகளை வழங்குதல் போன்ற செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பிரமான அடிப்படையிலான நன்கொடை நிதியின் கீழ் 04 பாடசாலைகளுக்கு உபகரணங்கள் மற்றும் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுத்தல் ஆகிய அபிவிருத்தி வேலைகளும் மீள்குடியேற்ற அமைச்சினூடாக 16 பாடசாலைகளுக்கும் கட்டட நிர்மானம் மற்றும் திருத்தம், தளபாடங்கள் உபகரணங்கள் வழங்குதல் ஆகிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like