நல்லூர் முத்துவை தொடர்ந்து முன்னாள் புலி உறுப்பினர் விக்டருக்கு வளைவீச்சு! 6 பொலிஸ் குழுக்கள் களத்தில்

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர் விக்டரை கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் 6 பொலிஸ் குழுக்கள் இது குறித்து சிறப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

யாழ்.கொக்குவில் பகுதியில் விசாரணை ஒன்றுக்காக சென்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது கடந்த 30ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொழும்பு மற்றும் மன்னார் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர் விக்டரை கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் நல்லூர் முத்து என்று அழைக்கப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், இதற்கு முன்னர் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like