இலங்கை கடற்படையினரால் 600 பேர் சுட்டுக்கொலை: மதுரை நீதிமன்றின் உத்தரவு

இராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என மேல் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இராமநாதபுரம் ஆர்.ஆர். சேதுபதி நகரைச் சேர்ந்த ராஜு என்பவர் மேல்நீதிமன்ற கிளையில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு வழங்குவதில்லை.

இதுவரை தமிழக மீனவர்கள் 600 பேரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு மீது மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள கடல் பரப்பில் குமரி மீனவர்கள் இருவரை இத்தாலி வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அந்த இரு வீரர்களையும் கேரள போலீஸார் கைது செய்தனர். கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு இத்தாலி அரசு தலா 1 கோடி இழப்பீடு வழங்கியது.

ஆனால் பிரிட்ஜோ குடும்பத்துக்கு மாநில அரசு 5 லட்சம் இழப்பீடு வழங்கியது. மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை’ எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நிகழ்ந்த கடற்பகுதி எது என்பது குறித்து இன்னமும் கண்டறியப்படவில்லை. மாநில அரசே அது குறித்து கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து மாநில அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராமநாதபுரம் டி.எஸ்.பி ரவிக்குமார் இது குறித்து விசாரிக்கும் விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதையேற்ற நீதிபதிகள், விசாரணை அதிகாரி ரவிக்குமார், 6 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

You might also like