யானை தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேலிகள் அமைத்து தருமாறு கிளிநொச்சி விவசாயிகள் கோரிக்கை

யானைத் தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு வேலிகளை அமைத்து தருமாறு கிளிநொச்சி கல்மடுநகர்ப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கல்மடுநகர்ப் பகுதியில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுவதுடன் சிறுபோகச் செய்கையினையும், குடியிருப்புக்காணியில் உள்ள பயன்தரு மரங்களையும் அழித்து வருகின்றன.

இதனைத் தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கல்மடுநகர், நாவல்நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானையின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

வருடாந்தம் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளும் கல்மடுக்குளத்தின் கீழ் தற்போது வறட்சி நிலை காரணமாக குளத்தின் நீரளவைக்கொண்டு 100 ஏக்கர் மாத்திரம் சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்சியாக சிறுபோக நெற்செய்கையை யானைகள் அழித்து வருகின்றமை விவசாயிகளிடத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இரவு வேளைகளில் யானைத் தாக்கத்திலிருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் காவலுக்குச் சென்ற விவசாயிகளும் உயிராபத்துக்களை எதிர்கொள்ளவேண்டிய நிலை காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு நேற்று முன்தினம் காவலுக்குச் சென்ற விவசாயி ஒருவரை யானை துரத்திய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றது.

இதேவேளை குடிமனைக்குள் புகும் யானைகள் மிகவும் பெறுமதி வாய்ந்த தென்னை மரங்களையும் ஏனைய பயிர் செய்கைகளையும் அழித்து வருகின்றன.

எனவே யானைத்தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் பாதுகாப்பு வேலிகளை அமைத்துத் தருமாறு இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like