முறிகண்டியில் யானை அட்டகாசம்: பயன்தரு மரங்கள் சேதம்

வன்னிப்பகுதியல் தீர்வு காணப்படாத ஒன்றாக காட்டு யானைகளின் தொல்லை தொடர்ந்தும் காணப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் எல்லைப்புறக் கிராமங்களில் வாழுகின்ற மக்கள் அன்றாட வாழ்வாதாரத்தையும், தொழில் வாய்ப்பையும் தினமும் தேடி அலைய வேண்டிய நிலையில் வாழ்ந்து வருகின்றதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பகுதி மக்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மக்கள் காட்டு யானைகள், குரங்கு போன்ற விலங்குகளிடமிருந்தும் தங்களுடைய வாழ்வாதாரப் பயிர்ச்செய்கைகளையும், வாழ்விடங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளதுடன், உயிராபத்தைக்கூட எதிர்கொள்ளக்கூடிய ஒரு அபாயகரமான நிலை காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய். மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளின் கீழ் உள்ள கோட்டைகட்டியகுளம், தென்னியன்குளம், உயிலங்குளம், வேட்டையடைப்பு, புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயங்கன்குளம், மூன்றுமுறிப்பு, பனங்காமம்,

சிறாட்டிகுளம், மேளிவனம், கருப்பட்டமுறிப்பு, ஒலுமடு உள்ளிட்ட கிராமங்களில் தினமும் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றது.

அத்துடன், கிராமங்களில் யானைகள் வராத நாட்களே இல்லை. கடந்த வாரம் கூட முறிகண்டிப் பகுதியில் ஊர் மனைக்குள் புகுந்த காட்டு யானைகள் பெருமளவான பயன் தரும் மரங்களை அழித்துள்ளன.

இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக கல்மடுப் பகுதியில் காட்டு யானை ஒன்று உட்புகுந்து வயல் நிலங்களையும் பெறுமதி வாய்ந்த தென்னை மரங்களையும் அழித்துள்ளன.

வவுனியா வடக்கு எல்லையோரக் கிராமங்களிலும் மன்னார் மாவட்ட எல்லையோரக் கிராமங்களிலும் காட்டு யானைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது தேங்காய் ஒன்றின் விலை ஐம்பது ரூபாவிற்கு மேல் அதிகரித்துள்ளது. முப்பது வருடங்களிற்கு மேலான வயதுகளையுடைய பயன்தரக்கூடிய பெருமளவான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதனால் தென்னை மரங்களின் வருமானத்தை நம்பி வாழும் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியுள்ளது.

முல்லைத்தீவு மேளிவனம் பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் ஐம்பது வரையான குடும்பங்கள் பகலில் அன்றாட உணவிற்குப் போராட வேண்டியதும், இரவில் காட்டுயானைகளிடமிருந்து உயிரைப் பாதுகாக்கப் போராட வேண்டியுள்ளது.

இந்தப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் விவசாயத்தினையும் கூலித்தொழிலையும் நம்பி வாழுகின்ற சமூகம்.

ஆனால், காட்டு யானைகளின் தொல்லையால் விவசாயச் செய்கையை எதனையும் மேற்கொள்ள முடியாதுள்ளது.

மீள்குடியேறிய காலத்திலிருந்து இன்று வரைக்கும் பல தடவைகள் தென்னை, மா, பலா போன்ற நீண்டகாலம் பயன்தரக்கூடிய பயிர்களை நடுகை செய்கின்ற போதும், அவற்றை யானைகளிடமிருந்து பாதுகாக்க முடியாதுள்ளது.

இந்தப் பகுதிக்கு யானைக்கான வேலிகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கின்ற போதும், வாக்குறுதிகள் மட்டும் கிடைக்கின்றன. ஆனால் வேலிகள் அமைக்கப்படுதில்லை.

யானைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்ற போதும், யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு தற்காலிகமாக யானை வெடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வழங்கப்படுகின்ற யானை வெடிகளுக்கு யானைகள் பழக்கப்பட்டு விட்டன. தென் பகுதியிலும் இதேபோன்று யானைத் தொல்லை காணப்படுகின்ற போதும், அங்கே யானை வேலிகள் அமைக்கப்பட்டு பயிர்செய்கைகள் பாதுகாக்கப்படுகின்றன.

இவ்வாறு பின்தங்கிய எல்லையோரக் கிராமங்களில் வாழுகின்ற மக்களின் பயிர்செய்கைகளை பாதுகாப்பதற்கு மின்சார வேலிகளை அமைக்க வேண்டுமென பல்வேறு வலுவான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவை மீள்குடியேற்றப் பிரதேசங்களில் நடைமுறையில்லை. ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் யானைகளுக்கான மின்சார வேலிகளை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மீள்குடியேற்றக் கிராமங்களில் காட்டு யானைகளின் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.

யானைத்தா தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவங்களும் இருக்கின்றன.

ஒவ்வொரு குடும்பமும் தமக்குத் தேவையான மரக்கறிகள் இதர பயிர்செய்கைகள் வீட்டுத் தோட்டங்கள் என்பவற்றை முன்னெடுத்துள்ளனர்.

காட்டு யானைகளின் தொல்லையால் அதைக்கூட செய்யமுடியாமலும், விவசாயச் செய்கை மூலம் அறுவடை செய்கின்ற நெல், கச்சான், உழுந்து போன்ற தானியங்களையும், வீடுகளுக்குள் வைத்திருக்க முடியாதுள்ளது.

மற்றொரு பாரிய பிரச்சினையாக குரங்குகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றன. பொதுவாக வீடுகளுக்குள் சமைத்து வைத்திருக்கின்ற உணவுகளை ஆட்கள் இல்லாத வேளையில் உண்ணுகின்றன.

இவ்வாறு குரங்குகள் கைத்தொலைபேசியை எடுத்துச் செல்கின்றது. ஆடைகளை கொண்டு செல்கின்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் புகுந்த குரங்குகள் அலுவலக பொருட்களைச் சேதப்படுத்தியிருந்தன.

இவ்வாறு காட்டுயானைகளிலிருந்து உயிர்களையும் உடமைகளையும் பயிர்செய்கைகளையும் பாதுகாக்க வேண்டிய ஒரு நிலையில் மீள்குடியேறிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும்,சம்பந்தப்பட்ட திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like