யாழ். துன்னாலையில் அசாதாரண நிலை! முதலமைச்சருக்கு அவசர கோரிக்கை

யாழ். துன்னாலை பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு வடமாகாண முதலமைச்சருக்கு அவசர கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இன்று காலை சந்தித்து பேசிய துன்னாலை பிரதேச மக்கள் குழு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அண்மையில் யாழ்.வடமராட்சி பகுதியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து பொலிஸாரின் வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத்தடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக துன்னாலை உள்ளிட்ட பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவலைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், பலரையும் கைது செய்துள்ளனர்.

இந்த திடீர் சுற்றிவலைப்பினாலும், கைது நடவடிக்கையினாலும், மக்கள் மத்தியில் அச்சமும், பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளமையை வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி விரைவில் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

You might also like