வட மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 17,999 மாணவர்கள் தோற்றவுள்ளனர்

ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 147 பரீட்சை நிலையங்களில் 17 ஆயிரத்து 999 மாணவர்கள் தோற்றவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் 147 பரீட்சை நிலையங்களில் 17 ஆயிரத்து 999 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

இப் பரீட்சைக்காக வட மாகாணத்தில் 6 வினாத்தாள் விநியோக மையங்கள் செயற்படும். அதேபோன்று 48 கண்காணிப்பு நிலையமும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இயங்கும் நிலையங்களின் கீழேயே குறித்த 147 பரீட்சை நிலையங்கள் காணப்படும் அதில் இந்த ஆண்டு மொத்தமாக 17 ஆயிரத்து 999 மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறித்த 17 ஆயிரத்து 999 மாணவர்களில் 14 ஆயிரத்து 25 மாணவர்கள் பாடசாலை ரீதியாகவும் 3 ஆயிரத்து 974 மாணவர்கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றுவர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் இரு பிரிவாக யாழ்ப்பாணம் 1 மற்றும் யாழ்ப்பாணம் 2 என நிலையங்கள் இயங்கும். இதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் 1ல் 10 கண்காணிப்பு நிலையத்தின் கீழ் 39 பரீட்சை நிலையங்களில் 5 ஆயிரத்து 163 மாணவர்களும் யாழ்ப்பாணம் 2 ல் 8 கண்காணிப்பு நிலையத்தின் கீழ் 39 பரீட்சை நிலையங்களில் 4 ஆயிரத்து 757 மாணவர்களுமாக மொத்தம் 9 ஆயிரத்து 920 மாணவர்கள் தோற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 8 கண்காணிப்பு நிலையத்தின் கீழ் 17 பரீட்சை நிலையங்களில் 1928 மாணவர்களும் ,

முல்லைத்தீவில் 6 கண்காணிப்பு நிலையத்தின் கீழ் 14 பரீட்சை நிலையங்களில் 4 ஆயிரத்து 757 மாணவர்களும், வவுனியா மாவட்டத்தில் 9 கண்காணிப்பு நிலையத்தின் கீழ் 22 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 562 மாணவர்களும் தோற்றுகின்றனர்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் 7 கண்காணிப்பு நிலையத்தின் கீழ் 16 பரீட்சை நிலையங்களில் 1940 மாணவர்களும் தோற்றுகின்றனர் எனவும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

You might also like