வடக்கு அமைச்சரவை மாற்றம்! புளொட்டின் பதவி யாருக்கு?

மாற்றியமைக்கப்படும் வடக்கு மாகாண அமைச்சரவையில் புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால், அந்தக் கட்சி சார்பில் யாருக்கு அதனை வழங்குவது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது.

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படும் என்றும், இதன்போது, புளொட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

புளொட் அமைப்புக்கு அமைச்சுப் பதவி கிடைக்கப் பெற்றால் அந்தக் கட்சி சார்பில் யாரை நியமிப்பது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது என அறியமுடிகின்றது.

புளொட் அமைப்பை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியா மாவட்டத்தில் ஜி.ரி.லிங்கநாதனும், முல்லைத்தீவு மாவட்டத்தில் க.சிவநேசனும் (பவான்) உள்ளனர்.

வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனே, அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடி தொடர்பில் மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பித்திருந்தவர்.

இவரை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிய போதும் அவர் அதனை மறுதலித்திருந்தார். “பிரேரணை கொண்டு வந்ததே அமைச்சுப் பதவிக்காகத்தான் என்று கூறுவார்கள். இதனால் அமைச்சுப் பதவியை நான் ஏற்கமாட்டேன்” என்று கூறியிருந்தார்.

முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் க.சிவநேசன், முதலமைச்சருக்கு சுயவிவரக் கோவை அனுப்பியபோது அவருக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாதுள்ளது என்று பதில் வழங்கியிருந்தார்.

ஊடகவியலாளர் சிவராம் கொலையுடன் தொடர்புடையதாக அவரது பெயர் குறிப்பிடப்படுவதன் காரணமாக அமைச்சுப் பதவி வழங்க முடியாதிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதனால், புளொட்டுக்கு வழங்கப்படும் அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் தோன்றியுள்ளது.

You might also like