வடக்கு அமைச்சரவை மாற்றத்தின்போது அனந்தி, சர்வேஸ்வரனின் பதவிகள் நிரந்தரம்!

வடக்கு மாகாண புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், கூட்டுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட அனந்தி சசிதரன் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட க.சர்வேஸ்வரன் ஆகிய இருவருக்கும் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாகவே அவர்களுக்குப் பதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். எனினும், மாகாண சபையின் எஞ்சிய காலப் பகுதிக்கும் அவர்கள் அமைச்சர்களாகத் தொடர்வார்கள் என்று கூறப்படுகின்றது.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த 5ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

அதில் கலந்துகொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான ஓர் ஆசனத்தை அனந்தி சசிதரனுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார் என்றும், ஈ.பி.ஆர்.எல்.எவ்விற்கான ஆசனமும் வழங்கப்பட்டுள்ளது என்றும், புளொட்டுக்கும் மற்றும் ரெலோவுக்கும் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தான் முடிவெடுத்திருக்கின்றார் என்றும் முதலமைச்சர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அதேபோன்று மற்றொரு சந்தர்ப்பத்தில், மாகாண சபையின் அவைத் தலைவர், பிரதி அவைத் தலைவர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகிய நால்வரும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்கள் என்றும், ஏனைய கட்சிகளுக்கு ஒவ்வொரு அமைச்சுப் பதவியே வழங்கப்படுகின்றது என்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலத்தில் புளொட் அமைப்புக்கு ஓர் அமைச்சுப் பதவியும் கொடுக்கப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்களின் அடிப்படையில் அனந்தி மற்றும் சர்வேஸ்வரனின் அமைச்சுப் பதவிகள் நிரந்தரமாக அவர்களுக்கே வழங்கப்படும் என்றே தெரிகின்றது என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

இருவருக்கும் தற்காலிகமாக என்று வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியை நிரந்தரமாக்குவது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் முடிவெடுத்துள்ளமையினாலேயே அவர் புளொட்டுக்கும், ரெலோவுக்கும் ஆசனம் வழங்குவது தொடர்பில் மட்டுமே பேசியுள்ளார் என்று அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You might also like