அமைச்சர் சத்தியலிங்கம் பதவியை இராஜினாமா செய்ததற்கு இது தான் காரணம்!

தமிழரசுக்கட்சியின் வட மகாணாசபை உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்திற்கும் தமிழ் மக்களுக்கு அமைச்சர் வாரியம் தொடர்பான பிரச்சினையும் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக காண்பிப்பதை தவிர்ப்பதற்கும் தனது வட மாகாண சுகாதார அமைச்சர் பதிவியை இராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

30 வருட ஆயுதப்போராட்டகாலத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு மக்களாக வாழ்ந்தவன் என்பதன் அடிப்படையிலும், மக்களின் துன்ப துயரங்களில் நேரடியாக பங்குகொண்டவன் என்பதன் அடிப்படையிலும் தங்களால் எனக்கு பொறுப்பளிக்கப்பட்ட அமைச்சர் பதவியினூடாக சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட எமது தேசத்தையும்,

அதன்பால் துன்பங்களை அனுபவித்த மக்களின் தேவைகளை இனங்கண்டு இருக்கும் வளங்களை பயன்படுத்தி மனச்சாட்சிக்கு விரோதமில்லாது எனது கடமையை திறம்பட செய்து வருகின்றேன்.

நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போலல்லாது வேறுபட்ட தேவைகளை கொண்ட மாகாணமாக உள்ள எமது மாகாணத்தில் வாழுகின்ற மக்களுக்காக அவர்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்ய விசேடமான பல செயற்திட்டங்களை வடிவமைத்துள்ளேதாகவும் குறிப்பிட்டுள்ளார்

அவற்றினை முதலமைச்சரினதும், மாகாண அமைச்சர் வாரியத்தினதும் பூரண ஆதரவுடன் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு என்னாலான பணியை செய்தவருகின்றேன்.

எனினும் துரதிஸ்ரவசமாக அமைச்சர்களுக்கெதிராக முறைகேடுகளை விசாரிக்கும் வகையிலான விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு அதில் நானும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தேன்.

இந்த நிலையில் விசாரணைக்குழுவின் இறுதி தீர்ப்பில் நான் குற்றமற்றவன் என்றும் என்னால் நடைமுறைப்படத்தப்படுகின்ற நல்ல செயற்திட்டங்களுக்கு மாகாண நிர்வாகம் பூரண ஒத்துழைப்பை நல்கவேண்டுமென்றும் விசாரணைக்குழு பரிந்துரைகளை செய்திருந்த நிலையில் மீண்டும் எனக்கு எதிராக மீள்விசாரணை நடாத்தப்படல் வேண்டுமென்றும் அதற்காக கட்டாய விடுமுறையில் என்னை அனுப்புவதாகவும் முதலமைசர் தெரிவித்திருந்தார்.

அதனால் ஏற்பட்ட குழப்பங்கள் யாவரும் அறிந்ததே. அதன் பின் முதலமைச்சர், தான் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாகவும், அந்த

விசாரணைக் குழு முன் தோன்றி விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டேன் என ஊடகங்கள் வாயிலாக தான் அறிந்ததாகவும், ஊடகங்கள் வாயிலாக தான் அறிந்த செய்தி உண்மையா, பொய்யா என எழுத்து மூலம் அறிவிக்குமாறு இந்த மாதம் 2 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதம் எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்திருந்தது.

அதற்கு நான் எனது பதிலை நான் எழுதியிருந்தேன். அதில் நீங்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவர்களும் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் ஒரு நடுநிலையான, சட்டபூர்வமான விசாரணைக் குழு ஒன்றினை அமைத்தால் அதன் முன் தோன்றி விசாரணையில் பங்கெடுப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றேன் என்ற செய்தியை தெரிவித்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்களுடைய இல்லத்தில் அவரும், கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்மந்தன் ஐயா அவர்களும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி தலைவர்களும் ஒரு கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் என்னை அமைச்சர் வாரியத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக செயற்பட்டிருக்கிறார். முதலமைச்சரால்

நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு என்னை நிரபராதி எனக் கூறிய பின்னரும் அவர் ஒருஅரசியல் நோக்கத்திற்காக என்னை அமைச்சர் வாரியத்தில் இருந்து நீக்க எடுக்கின்ற தீராத முயற்சியை அந்தக் கூட்டத்தின் ஊடாகவும் என்னால் அறிய முடிந்தது.

அதன் தொடர்ச்சியாக 6 ஆம் திகதி நாங்கள் தமிழரசுக் கட்சியின் உடைய மாகாண சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி இந்த நிலமை தொடர்பாக ஆராய்ந்தோம்.

அந்தக் கூட்டத்தில் நாங்கள் சில முடிவுகளை எடுத்தோம். தற்போது தமிழ் மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். வடமாகாணசபையில் யார் அமைச்சர் என்பது தமிழ் மக்களுடைய பிரச்சனையல்ல.

மிகவும் முக்கியமான பல பிரச்சனைகள் எம் கண்முன்னே இருக்கின்றன. எங்களுடைய நீண்டகாலப் போராட்டத்தில் நாங்கள் எங்களை ஆளக்கூடிய,

தமிழ் மக்களுடைய உரிமைகளை அங்கீகரிக்கக் கூடிய ஒரு பூரணமான சுயாட்சியை உள்ளடக்கிய ஒரு தீர்வை நோக்கி நகரவேண்டியுள்ளது.

அதற்கான இறுதி சந்தர்ப்பமாக தற்போதைய சூழலை கருதவேண்டியுள்ளது. தற்போது எமது மாகாணத்தில் காணி அபகரிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, சிங்கள குடியேற்றங்கள் என பல பிரச்சனைகள் இருக்கின்றன.

அதைவிடுத்து வடக்கு மாகாண சபையில் யார் அமைச்சராக இருக்கிறார், எந்தக் கட்சியை சேர்ந்தவர் அமைச்சராக இருக்கிறார் என்பது இரண்டாம் பிரச்சினைகளே.

அதனால் நாம் மக்களது பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.

அந்த வகையில் முதலமைச்சர் ஒரு அரசியல் நோக்கத்திற்காக என்னை அமைச்சர் வாரியத்தில் இருந்து நீக்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் நாம் எங்களுடைய மக்களது பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில முடிவுகளை எடுத்துள்ளோம்.

தற்போது தமிழ் மக்களது பிரச்சனைகளாக வடக்கில் ஏற்படும் வாள்வெட்டுக்களும், வடக்கு மாகாண சபையில் ஏற்படும் பிரச்சனைகள்

என்பவற்றை மக்களது பிரச்சனைகளாக காட்டும் சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் நாம் அவற்றை புறந்தள்ளி எமது மக்களது பிரச்சனைகளை முன்னுறுதித்து இந்த முதலாவது மாகாணசபையில் கௌரவ முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்படும் அமைச்சர் வாரியத்தில் தமிழரசுக் கட்சி ஆகிய நாம் அமைச்சு பதவிகளை பெறுவதில்லை என முடிவெடுத்துள்ளோம்.

இந்த தீர்மானத்தை எமது கட்சி தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளோம்.

இந்த நிலையில், என்னைத் தொடர்ச்சியாக அமைச்சரவையில் இருந்து அகற்ற வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்காகவும்,

எமது மக்களது பிரச்சனை அமைச்சர் யார் என்பது அல்ல என்பதாலும், எமது கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் ஏகமனதாக முதலமைச்சரின் அமைச்சரவையில் பதவி பெறுவதில்லை என்ற தீர்மானத்திற்கு அமைவாகவும் நான் எனது சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்கின்றேன்.

இந்த இராஜினாமா கடிதத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஐயா அவர்களுக்கும், தமிழரசுக் கட்சி தலைவருக்கும், முதலமைச்சருக்கும் மற்றும் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்.

அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுகாதார அபிவிருத்தி திட்டங்களை முதலமைச்சரின் புதிய அமைச்சர் வாரியம் தொடர்ந்து முன்கொண்டு செல்ல வேண்டும் எனவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்

You might also like