வவுனியாவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கணேசபுரம் மக்கள் போராட்டம்

வவுனியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட கணேசபுரம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி இன்று (08.08.2017) மதியம் 2.30 மணிக்கு போராட்டம் இடம்பெற்றது.

வவுனியா மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்திலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வந்த மக்கள் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று தாயகம் திரும்பிய மக்களை 2004 ஆண்டு கணேசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதாகவும் அன்று தொடக்கம் அக்கிராம மக்கள் வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் மழை காலங்களில் இடம்பெயர்வுகளை சந்திப்பதாக தெரிவிக்கும் மக்கள் வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இன்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சென்று விட்டனர்.

You might also like