சுலக்சன், கஜன் படுகொலை? பிணையை நிராகரித்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களான சுலக்சன் மற்றும் கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கின் சந்தேகநபர்களின் பிணை மனுவை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஐவரினதும் பிணை கோரிய மனு இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், பிணை வழங்க முடியாது என தெரிவித்து நீதிபதி இளஞ்செழியன் மனுவை நிராகரித்துள்ளார்.

இதேவேளை, யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு யாழ். பல்கலைக்கழக மூன்றாம் வருட கலைப்பீட, அரசறிவியல்துறை மாணவனான நடராஜா கஜன் மற்றும் ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், இரு மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாணவர்களின் மரணத்திற்கான பிரேத பரிசோதனை அறிக்கையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மற்றைய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

You might also like