கொலை குற்றச்சாட்டு! விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தஜரூபன் 11 வருடங்களின் பின் விடுதலை

இராணுவப் படையை சேர்ந்த மேஜர் துவான் நிசாம் முத்தலிப் படுகொலை உட்பட மூன்று குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கோபால் தஜரூபன் 11 வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து குறித்த நபரை கொழும்பு விசேட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

2005ஆம் ஆண்டு ஆனி மாதம் இராணுவ அதிகாரியான திசாநாயக முதியான்சலாகே தசநாயகவுடன் இணைந்து இராணுவப் படையை சேர்ந்த மேஜர் துவான் நிசாம் முத்தலிப்பை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி குண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்ததாக மூன்று குற்றச்சாட்டுக்கள் இவர்மீது சுமத்தப்பட்டிருந்தது.

அரச தரப்பு சாட்சியங்களாக 19 சாட்சியாளர்களை பெயர் குறிப்பிட்டு சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2006ஆம் ஆண்டு வைகாசி மாதம் விடுதலைப் புலி உறுப்பினரான கோபால் தஜரூபன் மற்றும் இராணுவ அதிகாரியான திசாநாயக முதியான்சலாகே தசநாயக ஆகியோர் பயங்கரவாத தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இருவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது கே.வி. தவராசா தனது விவாதத்தில்,

“இந்தப் படுகொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியங்களாக 19 சாட்சியாளர்களும் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் இரண்டும், பிரேத பரிசோதனை அறிக்கையும், பெயர் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இந்த வழக்கின் இரண்டு எதிரிகளில் கோபால் தஜரூபனுக்கு எதிராக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே முதன்மை சான்றாக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டது.

அரச சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்கையில் பல முக்கியமான முரண்பாடுகளை இந்த நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதுடன் உதவிப்பொலிஸ் அத்தியட்சர் முன்பு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என்பதும் சாட்சியத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை வழங்க வருபவருக்கு அவ்வாறு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினால் ஏற்படும் சட்ட விளைவுகளை தான் விளங்கப்படுத்தவில்லை என்பதை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறுக்கு விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிஸாரினால் எதிரி மிகக் கடுமையாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்பட்ட பல காயவடுக்கல் சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட வைத்திய அறிக்கையிலும் சாட்சியத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிரி இந்த நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய பொழுது பயங்கரவாத தடைப்பிரிவு பொலிஸார் தன்னை சித்திரவதைப்படுத்தி வாக்கு மூலத்தை பெற்றுக் கொண்டார்கள் என்பதுடன் தனது சொந்த விருப்பத்தில் தான் எந்த வாக்கு மூலமும் பொலிசாருக்கு வழங்கவில்லை என சாட்சியம் அளித்துள்ளார்.

சிரேஸ்ட அரச சட்டத்தரணி எதிரியை நீண்ட நேரம் குறுக்கு விசாரணை செய்த போதிலும் எதிரியின் சாட்சியத்தின் நிலைப்பாட்டில் எந்த முரண்பாட்டையும் அரச தரப்பால் முன்வைக்க வில்லை என்பதனை கருத்தில் கொண்டு எதிரியால் சுயமாக வழங்கப்பட்டதாக அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இந்த நீதிமன்றம் எதிரியினால் சுயமாக பொலிஸாருக்கு வழங்கப்படாத வாக்குமூலமென நிராகரித்துள்ளது.

இராணுவ அதிகாரியான திசாநாயக முதியான்சலாகே தசநாயக்கவுக்கு எதிராக நடைபெறும் விசாரணை முடிவுராத போதிலும் இந்த குற்றச்சாட்டு பத்திரத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் மற்றைய எதிரியான கோபால் தஜரூபனுக்கு எதிராக எந்தச் சான்றுகளும் சட்டமா அதிபரினால் முன்வைக்கப்படவில்லை.

2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்த எதிரி இன்றுவரை 11 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கோபால் தஜரூபனுக்கு எதிராக எந்தச் சான்றுகளும் இல்லாத நிலையில் எதிரியை சகல குற்றச் சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யும்படி” சட்டத்தரணி கே.வி.தவராசா தனது வாதத்தை முன்வைத்தார்.

இதையடுத்து அரச தரப்பினதும் 2ஆம் எதிரி தரப்பினதும் வாதப்பிரதிவாதத்தை அடுத்து கொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இரண்டாம் எதிரியான கோபால் தஜரூபனை வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்ததுடன், இராணுவ அதிகாரியான திசாநாயக முதியான்சலாகே தசநாயகவுக்கு எதிராக நடைபெறும் விசாரணையை செப்டம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

அரச தரப்பில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி வசந்த பெரேராவும், முதலாம் எதிரியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிசும் இரண்டாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணிகளான தர்மஜா தர்மராஜா, அனோமா பிரியதர்சினி ஆகியோரின் அனுசரணையில் சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜராகியிருந்தார்.

You might also like