நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை இடம்பெற்ற அடையாள அணி வகுப்பின் போது பிரதான சந்தேகநபர் அடையாளம் காட்டப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மாதம் 22ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூர் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், மற்றும் ஒரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்திருந்தார்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இதனையடுத்து, சரணடைந்த நபரை யாழ். நீதிவான் சதீஸ்கரனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்திய போது இன்றைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

அத்துடன், இன்றைய தினம் அடையாள அணிவகுப்பை நடத்துவதற்கும் யாழ். நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like