15 வயது பிரிவுக்குட்பட்ட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணித்தெரிவு

வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 வயது பிரிவுக்குட்பட்ட மாவட்ட மட்ட துடுப்பாட்ட அணித் தெரிவானது நேற்று தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட மட்ட பயிற்சியாளர் தலைமையில் வடதாரகை வலைப்பந்து பயிற்சிக் கூடத்தில் இத்தெரிவு இடம்பெற்றது. இத் தெரிவுக்காக மாவட்ட மட்டத்தில் துடுப்பாட்ட அணிகளைக் கொண்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், கோவில்குளம் இந்துக் கல்லூரி, செட்டிக்குளம் மகா வித்தியாலயம், புதுக்குளம் மகா வித்தியாலயம், பூவரசங்குளம் மகா வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம், விபுலானந்தா கல்லூரி, மடுக்கந்தை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

2004 உயர்தர மாணவர் குழுவின் பூரண அனுசரணையுடன் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் ஒருநாள் துடுப்பாட்ட போட்டித்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளின் போது தமது திறமைகளை வெளிப்படுத்திய 50 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இவ்வீரர்களிலிருந்து மாவட்ட பயிற்சியாளர், மற்றும் மாவட்ட துடுப்பாட்ட சங்கத் தெரிவுக்குழு உறுப்பினர்களால் 24 பேர் கொண்ட 15 வயது பிரிவுக்குட்பட்ட மாவட்டத் துடுப்பாட்ட வீரர்கள் குழாம் தெரிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் போது துடுப்பாட்ட சங்கத்தின் தலைவர் யோ.ரதீபன், பாடசாலை துடுப்பாட்ட அபிவிருத்திக் குழு தலைவர் டீ.சுந்தராங்கன், துடுப்பாட்ட சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை துடுப்பாட்ட பொறுப்பாசிரியர்கள் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like