யாழ். குடாநாட்டில் பலருக்கும் குறி! தொடரும் தேடுதல் வேட்டை

கோப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதால் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வெளிநாடொன்றிலிருந்தே ‘ஆவா’ குழு இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ள போதும் அதை உறுதி செய்யும் வகையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் ‘ஆவா’ குழுவுக்கு பணம் வழங்குவது யார்? என்பதைக் கண்டறிய பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில், கோப்பாய் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் இதுவரை கைதாகியுள்ள போதும் சம்பவ தினத்தன்று 14 பேர் சமுகமளித்திருந்ததாகவும் எஞ்சியவர்கள் கைது செய்யப்படும் வரை விசாரணைகளும் சுற்றிவளைப்புக்களும் தொடருமென்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதுவரை கைது செய்யப்பட்டிருப்பவர்கள் முன்னாள் போராளிகளா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அது பற்றி அறிய, அவர்களின் பெயர் பட்டியல் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அத்துடன் ‘ஆவா’ குழுவினர் ஆயுதங்கள் பாவித்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் பெருமளவில் கத்தி, வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி வந்தமையே ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோப்பாய் வாள் வெட்டு சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மூவர் கொழும்பு புறக்கோட்டை பகுதியிலும் ஒருவர் மட்டக்குளியிலும், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்புக்கு வந்ததற்கான காரணம் மற்றும் ‘ஆவா’ குழுவின் நோக்கம் ஆகியவற்றை கண்டறியும் நோக்கில் சந்தேக நபர்களிடமிருந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பிரதான சூத்திரதாரியான சத்தியவேல் நாதன் நிஷாந்தன் அல்லது நிஷா விக்டர் என்றழைக்கப்படுபவர் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் காலை புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

பிரதான சூத்திரதாரி 2014 ஆம் ஆண்டிலிருந்து பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பது ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது அவர் 2014 இல் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.

2015 இல் வீடு ஒன்றை சேதப்படுத்தியமை,2016 இல் சுன்னாகம் புலனாய்வுப் பிரிவினர் இருவரை காயப்படுத்தியமை, இரண்டு கடைகளை சேதப்படுத்தியமை, 2014 இல் கடையிலிருந்த ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியமை, கோப்பாய் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை வாளால் வெட்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பிரதான சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

கோப்பாய் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் நேரடி விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.

பிரதான சூத்திரதாரியான நிஷா விக்டர், யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ராஜ்குமார் ஜெயக்குமார் அல்லது வினோத் எனப்படுபவரும் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த குலேந்திரன் மனோஜித் அல்லது மனோஜ் என்றழைக்கப்படுபவரும் புறக்கோட்டை பிரதான பஸ் தரிப்பிடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் போல் என்பவர் மட்டக்குளி பிரதேசத்திலும் இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிகாந்தன் குகதாஸ் மற்றும் கொக்குவிலைச் சேர்ந்த அர்ஜூனன் பிரசாந்த் ஆகியோர் யாழ்ப்பாணத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

You might also like