கிளிநொச்சியில் குடியிருப்புக்களுக்கு அருகில் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படுவதாக மக்கள் விசனம்

கிளிநொச்சியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புகளுக்கு அருகில் இராணுவத்தினர் குண்டுகளைச் செயலிழக்க வைப்பதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி, உமையாள்புரம் மற்றும் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளிலேயே குறித்த செயற்பாடுகளை இராணுவத்தினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2 மாதங்களாக இந்த பகுதியில் குண்டுகள் செயலிழக்க செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் குடியிருப்புக்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் வெடிபொருட்களின் சிதைவுகள் குடியிருப்புக்களை அண்மித்த பகுதிகளில் வந்து விழுவதாகவும், அதனால் ஆபத்துக்கள் ஏற்படலாம் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்வாறு வெடி பொருட்களை செயல் இழக்கச் செய்யும் செயற்பாட்டினை மக்களின் குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளாது, அதற்குரிய பொருத்தமான பகுதிகளுக்கு இவ்வாறான செயற்பாடுகளை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like