தனியார் பேரூந்து உரிமையாளர்கள் வவுனியா வர்த்தக சங்கத்தின் மீது கடும் விசனம்

வவுனியா வர்த்தக சங்கத்தினர் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள், நடத்துனர்களுக்கு சார்பாக செயற்படுவதுடன் பாதிக்கப்படும் தனியார் போக்குவரத்து துறை பற்றி சிந்திக்கவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு, நேற்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் செல்லாததால் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர்கள், உரிமையாளர்களிடையே வவுனியா நகரில் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வந்த வர்த்தக சங்க தலைவர் ரி.கே.இராஜலிங்கத்தை சந்தித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள், நடத்துனர்கள், சாரதிகள் தமது நலன் தொடர்பில் வர்த்தக சங்கம் சிந்திக்கவில்லை.

இணைந்த நேர அட்டவணைக்கு இ.போ.சபை மற்றும் தனியார் துறையை கொண்டு வருவதைவிடுத்து எம்மை பாதிக்கச் செய்யும் வகையில் வர்த்தக சங்கம் செயற்படுகிறது.

வர்த்தக சங்கத்தினர் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் இ.போ சபை பேருந்து நிலையத்தை பயன்படுத்து தொடர்பிலோ அல்லது புதிய பேருந்து நிலையம் தொடர்பிலோ எந்த பேச்சுக்களிலும் ஈடுபடாது இ.போ சபைக்கு ஆதரவாக செயற்படுகிறது.

இ.போ சபை பேருந்துகள் நகரில் இருந்து தமது சேவையை வழங்கும் போது நாம் ஏ9 வீதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு சென்றால், நாம் தான் பாதிக்கப்படப் போவது.

நாம் வாகன லீசிங் கட்ட முடியாது தற்கொலை செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களா என தனியார் பேரூந்து உரிமையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

You might also like