கொலை செய்ய சிறையில் வைத்து இரகசிய திட்டம்! வித்தியா படுகொலை வழக்கின் சாட்சியாளர் வழங்கிய தகவல்

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் வைத்து 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை கொலை செய்ய இரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் வைத்து இந்த இரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ள நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை முன்னெடுக்க கோட்டை நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வைத்து 11 பேர் கடத்தப்பட்ட நிலையில், குறித்த அனைவரும் திருகோணமலையில் உள்ள இரகசிய வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் படைத்தரப்பை சார்ந்த பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான குழுவினரே இவர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள சாட்சியாளர் ஒருவருக்கு அறிவித்தல் கொடுக்க சென்ற போது, அவரின் ஊடாக கொலை சதித்திட்டம் தொடர்பிலான தகவல்கள் வெளியானதாக நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கு தொடர்பான சாட்சியாளர் வேறு ஒரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில். சுகயீனம் காரணமாக சிகிச்சைகளுக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் வைத்து 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களில் ஒருவரான நலின் பிரசன்ன விக்ரமசூரிய, பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை கொலை செய்ய திட்டம் தீட்டியமை தொடர்பில் அறிந்துகொண்டுள்ளார் என நேற்றைய தினம் கோட்டை நீதவானுக்கு கையளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, வித்தியா கொலை வழக்கு சாட்சிக்கான அறிவித்தலை கையளிக்க சென்ற போது, குறித்த சாட்சியாளர் நீங்களா நிசாந்த சில்வா என கேட்டுள்ளார்.

அதற்கு பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா ஆம் என பதிலளித்துள்ளார். இதனையடுத்து தனியாகவா வந்துள்ளீர்கள் என அந்த சாட்சியாளர் கேட்டுள்ளார். அதற்கும் பொலிஸ் பரிசோதகர் ஆம் என பதில் கூறியுள்ளார்.

இதன் போதே கொலைச்சதி தொடர்பிலான தகவல்களை அந்த சாட்சியாளர் நிசாந்த சில்வாவுக்கு தெரிவித்துள்ளதுடன், அது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

சிறைச்சாலை வைத்திசாலையில் வைத்து விக்ரமசூரிய எனும் கடற்படை சந்தேகநபர் பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வாவை கொலை செய்யும் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக வித்தியா கொலை வழக்கின் சாட்சியாளர் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் நான்கைந்துபேர் மாட்டிக்கொண்டோம். எங்களின் மற்றையவர்கள் வெளியே இருக்கின்றனர். பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இருக்கும் வரையில் நாம் தப்பிக்க முடியாது.

வெளியில் உள்ளவர்களிடம் சொல்லி நிசாந்தவுக்கு வேலையை காட்ட வேண்டியதுதான்” என விக்ரமசூரிய கூறியதாக வித்தியா கொலை வழக்கின் சாட்சியாளர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இந்நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கோட்டை நீதிவான் லங்க ஜயரத்ன உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like