பாலியல் வன்கொடுமை: குழந்தை பெற்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்

மதுரை அருகே பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி குழந்தை பெற்ற சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் நாகம்மாள். கடந்த ஓராண்டுக்கு முன்பு, இவரது 16 வயது இளையமகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, நாகம்மாளின் மூத்த மகளின் கணவர் லட்சுமணன் (28) அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதை சிறுமி தன்னுடைய பெற்றொருக்கு உடனடியாக தெரிவிக்கவில்லை. பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி கர்ப்பமடைந்த பிறகு இந்த விடயம் வெளியே தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த லட்சுமணன் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் போஸ்கோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, கர்ப்பமாக இருந்த அந்த சிறுமி சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பெற்றுள்ளார். இருப்பினும், அவர் மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு மனமுடந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுமி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய் நாகம்மாள் அளித்த புகாரின் பேரில் மதுரை ஒத்தக்கடை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இதே போல, கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 14 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆனால், அவருடைய பெற்றோர்கள் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு எதிராக புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like