கிளிநொச்சியில் இன்னும் 357 குடும்பங்களை மீள்குடியேற்ற வேண்டியுள்ளது

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசத்தில் ஏழாயிரத்து 434 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள போதும், 357 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாக பூநகரிப் பிரதேச செயலர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேச செயலர் பிரவின் கீழான மீள்குடியேற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேச செயலர் பிரிவில் இதுவரை ஏழாயிரத்து 434 குடும்பங்களைச் சேர்ந்த இருபத்து ஐயாயிரத்து 891 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு ஐயாயிரத்து 122 புதிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. 290 சேதமடைந்த வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஐயாயிரத்து 412 குடும்பங்களின் வீட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளபோதும் இரண்டாயிரத்து 22 குடும்பங்களுக்கான வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

பூநகரிப் பிரதேசத்தில் மீள்குடியேறுவதற்கு 357 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 232 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களை மீள்குடியேற்ற வேண்டியுள்ளது.

பூநகரிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவுப் பகுதியில் மீள்குடியேறுவதற்கு 336 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து 214 பேரும் இதனைவிட, மட்டுவில்நாடு மேற்கு, மட்டுவில்நாடு கிழக்கு ஆகிய பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் படையினர் வசமிருக்கின்ற காணிகளை விடுவித்து மீள்குடியேற்றுமாறும் குறித்த குடும்பங்கள் தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like