வவுனிக்குளத்தின் ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்

முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் கீழ் உள்ள ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் முன்வர வேண்டும் என நீரப்பாசனத் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான வவுனிக்குளத்தின் கீழ் இடது கரை, வலது கரை நீர்ப்பாசன வாய்க்கால்களை அண்டிய வகையில் உள்ள குடியேற்றத் திட்டங்களில் மேட்டு நிலப் பயிர் செய்கைகளை ஊக்குவிக்கும் வகையில் 20இற்கும் மேற்பட்ட ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்கள் இருந்தன.

கடந்த 1990ஆம் ஆண்டு யுத்த காலத்தில் அனைத்து ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களும் செயலிழந்து போயுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் கடந்த 1994ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் பாண்டியன்குளம் பகுதியில் உள்ள நீர்ப்பம்பி மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் மேட்டு நிலப் பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்யுத்தம், பொருளாதாரத்தடை காரணமாக அதுவும் செயலிழந்து போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் முப்பது வருடங்களுக்கு மேலாக எந்தவித புனரமைப்பு பணிகளும் இன்றி பராமரிப்பு வேலைகள் மாத்திரம் செய்யப்பட்டு வந்த குளம் புனரமைக்கப்பட்டதுடன் அதன் நீர்க் கொள்ளளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னர் போன்று ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில் வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் கருத்துத் தெரிவிக்கும் போது,

வவுனிக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இக்குளத்தின் கீழ் உள்ள செல்வபுரம், பாண்டியன்குளம், ஆகிய பகுதிகளில் ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதனை விவசாயிகள் எவரும் பயன்படுத்தாத நிலையில் செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு அமைவாக பெருந்தொகை நிதிகளைச் செலவிட்டு இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற போதும் அதனை விவசாயிகள் பயன்படுத்தாமல் இருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like