கிளிநொச்சியில் அதிகளவு காணிப் பிணக்குகள் கரைச்சிப் பிரதேசத்தில்

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் அதிகளவான காணிப் பிணக்குகள் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலர் பிரிவுகளிலும் அதிகளவான காணிப் பிணக்குகள் காணப்படுகின்ற பிரதேசமாக கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவு காணப்படுகின்றது.

குறிப்பாக கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மிகவும் பெறுமதி வாய்ந்த திணைக்களங்களுக்குச் சொந்தமான மற்றும் பொது காணிகள் அதிகாரிகளின் துணையுடன் அபகரிக்கப்பட்டுள்ளன.

இதனைவிட யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் பிற மாவட்டங்களிலும் வாழ்ந்த குடும்பங்களின் காணிகள் பல மிகவும் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகளால் அபகரிக்கப்பட்டுள்ளன.

இதனைவிட முன்னைய ஆட்சிக் காலத்தின் போது ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் முறையற்ற விதத்தில் கிளநொச்சி புதுமுறிப்பு, சோலைநகர், ஊற்றுப்புலம் ஆகிய பகுதிகளில் பெருமளவான காணிகள் எந்தவித முடிவுகளுமின்றி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று நகரிலுள்ள சில முக்கிய காணிகளும் முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி நகரை அண்மித்த பொது விளையாட்டு மைதானத்தை அண்டிய பகுதிகள், புகையிரத நிலையம், புகையிரத வீதி ஆகியவற்றிலும் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணிகளின்றி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியாளர்கள் இந்த மக்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எதனையும் எடுக்காததன் காரணமாக இன்னும் இந்த மக்கள் காணிகளற்ற மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது புதுமுறிப்பு, ஊற்றுப்புலம் ஆகிய பகுதிகளில் அத்துமீறிக் குடியிருக்கின்றனர் என்ற வகையில் ஐம்பது வரையான குடும்பங்களை வெளியேற்றுவதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனரே தவிர, முன்னைய ஆட்சியின் போது அரசியல் செல்வாக்குடன் கரைச்சிப் பிரதேசத்தில் அளவுக்கு அதிகமான காணிகளை வழங்கியதற்கு எந்த நடவடிக்கைகளும் இல்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆயிரத்து 182 காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 88 அழிப்பு பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைவிட 170 வரையான காணிக் கச்சேரிகள் வைக்கப்பட்டு ஐயாயிரத்து 470 வரையான காணிப் பிணக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன எனவும் கரைச்சிப் பிரதேச செயலக காணி அபிவிருத்தி உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like