ஊற்றுப்புலம் வள்ளுவர் பண்ணைக்கான பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் வள்ளுர்பண்ணைக்கான பாலத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஊற்றுப்புலம் கிராமத்திலிருந்து வள்ளுவர் பண்ணைக்கு செல்லும் பிரதான வீதியினை குறுக்கறுத்துச்செல்லும் முறிப்புக்குளத்தின் ஆற்றுக்கான பாலம் எவையும் அமைக்கப்படாது காணப்பட்டதாக இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்த பகுதியில் ஏற்கனவே ஒடுங்கிய நிலையில் காணப்பட்ட பாலத்தினூடாகவே மக்கள் ஆபத்தான நிலையில் தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த வள்ளுவர் பண்ணையிலுள்ள 85 வரையான குடும்பங்கள் இந்த பாலம் அமைக்கப்படாமையினால் பருவமழை காலங்களில் போக்குவரத்துக்களில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் சில வேளைகளில் போக்குவரத்துக்களும் முற்றாக துண்டிக்கப்படுகின்றன.

அத்துடன், இந்த பாலத்தினை அமைத்துத் தருமாறு கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த போதும், முன்னைய ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அதில் எந்த ஒரு அக்கறையும் செலுத்தாது வந்ததாகவும் இந்த பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தாங்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று இதற்கான பாலம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன எனவும் இதனை விரைவாக அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை அந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போதும், பருவமழையினால் புது முறிப்புக்குளத்தின் நீர்மட்டம் உயிர்வடைந்து காணப்படுவதால் பாலத்தினை அமைக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like