முல்லைத்தீவு துணுக்காய் குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

முல்லைத்தீவு – துணுக்காய் குடியிருப்பு பகுதியில் உள்ள குடியிருப்பு வீதிகள் புனரமைக்கப்படாமை மற்றும் காட்டு யானைகளின் தொல்லையால் இந்த பகுதியில் வாழும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல துன்பங்களை அனுபவித்து வருவதாக இந்த பிரதே மக்கள் தெரிவித்துள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள துணுக்காய் குடியிருப்பு பகுதியில் தற்போது நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த நிலையில் குடியிருப்பின் பிரதான வீதியாகக் காணப்படும் துணுக்காய் கோட்டைகட்டியகுளம், வீதி மாத்திரமே புனரமைப்பு செய்யப்பட்டுள்ள போதும், இந்த வீதியிலிருந்து குடியிருப்புக்களுக்கு செல்லும் எந்த வீதியும் புனரமைக்கப்படாது காணப்படுகின்றன.

இதனால் வீதியைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், முதியோர் எனப் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகினற்னர்.

இதனை விட தினமும் இந்த பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தினமும் தாங்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய ஒரு சூழ்நிலையே காணப்படுவதாகவும் இந்தப் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு வாழ்ந்து வரும் குடும்பங்கள் தமது கிராமத்தில் உள்ள குடியிருப்பு வீதிகளைப் புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறு வாழ்ந்து வரும் குடும்பங்கள் அன்றாடம் கூலி வேலை செய்தே வாழ வேண்டிய நிலையில் இங்குள்ள பல குடும்பங்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போதைய வறட்சியினால் கூலி வேலை எதனையும் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், வீதிகள் புனரமைக்கப்படாமை, தொழில் வாய்ப்பின்மை, குடிநீர்ப் பிரச்சினை இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் காட்டு யானைகளின் தொல்லையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இதற்கான தீர்வினை பெற்றுத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like