வித்தியா கொலை முன்னர் 5 வீடியோக்களை இணையத்தில் விற்ற சுவிஸ்குமார்

புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியை கொலை செய்வதற்கு முன்னர் சுவிஸ் குமார் என்ற மகாலிங்கம் சசிகுமார், கூட்டு பாலியல் வல்லுறவு அடங்கிய 4 அல்லது 5 வீடியோக்களை இணையத்தளத்தில் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்களை பயன்படுத்தியுள்ளதுடன் தகவல் வெளியான போது பணத்தை கொடுத்து அதனை மூடி மறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வித்தியா கொலை வழக்கின் இரண்டாவது குற்றவாளி ஈபிடிபி அமைப்பின் பிரதேச சபை உறுப்பினர். இந்த பாலியல் வீடியோ வியாபாரத்திற்கு மட்டுமல்லாது மணல் கடத்தலுக்கு இந்த அமைப்பு உதவி வந்துள்ளது.

மணல் கடத்தல் சம்பந்தமாக கடந்த 2010 ஆம் ஆண்டு தனது முகநூலில் தகவல் வெளியிட்ட வலைத்தள பதிவாளர் ஒருவர் அன்றைய தினம் இரவே சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அது சம்பந்தமாக எந்த விசாரணைகளும் நடக்கவில்லை.

வித்தியா கொலை ஊடாக மிகப் பெரிய பாதாள உலக அமைப்பின் வலையமைப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வடபகுதியை சேர்ந்த முன்னாள் அமைச்சரின் அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது மைத்துனரின் ஊடாக அரசியல் பாதுகாப்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

குறித்த அமைச்சரிடம் கடந்த வாரம் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தியிருந்தது. அவர் தனது அரசியல் பலத்தை பயன்படுத்தி குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாருக்கு பாதுகாப்பு வழங்கியமை மற்றும் தப்பிச் செல்ல உதவியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

எது எப்படி இருந்த போதிலும் வித்தியா கொலை சம்பந்தமான விடயத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்காத வகையில், குற்றத்துடன் சம்பந்தப்பட்ட முழு வலையமைப்பின் தகவல்களும் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

You might also like