வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் வெற்றி கிண்ணத்தை சுபீகரித்த குமுளமுனை ஐக்கிய அணி

வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழக அணி எதிர் நீராவிபிட்டி அல்ஹிஜிரா அணியினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் ஐக்கிய விளையாட்டு கழக அணியினர் பெரும் சவாலுக்கு மத்தியில் வெற்றி கிண்ணத்தை சுபீகரித்துள்ளது.

பத்து பந்து பரிமாற்றங்கள் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய விளையாட்டு கழக அணியினர் முதலில் களத்தடுப்பை தீர்மானித்தனர். துடுப்பெடுத்தாட களமிறங்கிய அல்ஹிஜிரா அணியினர் பத்து பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 66ஓட்டங்களுக்கு 9 இலக்குகளை இழந்திருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழக அணியினர் ஆரம்ப இலக்குகளை இழந்த போதும் பின்னணி துடுப்பாட்ட வீரர்களின் நிதானமான துடுப்பாட்டத்தின் மூலம் 9.2 பந்து பரிமாற்றங்களில் 7இலக்குகளை இழந்து 70 ஓட்டங்களை பெற்று வெற்றி கிண்ணத்தை தமதாக்கி கொண்டனர்.

ஆட்ட நாயகனுக்கான விருதினை குமுளமுனை ஐக்கிய விளையாட்டு அணியினை சேர்ந்த எஸ்.சிவதர்சன் பெற்றிருந்தார். 30 கழகங்கள் இப் போட்டியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப் போட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா , வட மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் விளையாட்டு கழகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like