சட்ட ரீதியான சுகாதார அமைச்சராக நானே தொடர்கின்றேன்: வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்

வட மாகாண சுகாதார அமைச்சராக சட்டரீதியாக நானே தற்போதும் தொடர்கின்றேன் என வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா, சேமமடு கிராமத்தில் கிராமிய வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எங்களுடைய மாகாணத்தில் புதியவர்கள் அரசியலுக்கு வருவதும் ஊரவன் அரசியலுக்கு வருவதும் படித்தவர்கள் வருவதும் பலருக்கு பிரச்சனையாக உள்ளது.

அந்த வகையில் எமது முதலமைச்சர் கூட இந்த விடயங்களை விளங்கி கொள்ளாமல் அவரை பிழையாக எங்கள் மாவட்டத்தில் இருந்தும் வேறு மாவட்டத்தில் இருந்தும் வழிநடத்தினர்.

அவர் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கி நாங்கள் அமைச்சர்கள் இராஜினாமா செய்து விட்டு போகும் அளவிற்கு கொண்டு வந்து விட்ட முழுப்பொறுப்பும் முதலமைச்சரை சாரும்.

நெதர்லாந்து நாட்டின் மூலம் என்னால் பெறப்பட்ட 1400 கோடிரூபாவுக்கான வேலைகள் நடைபெறாது விட்டால் அதற்கான போறுப்பு அதற்கானமுழுப்பொறுப்பையும் முதலமைச்சர் ஏற்க வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு மன்னர் ஜப்பான் நாட்டில் இருந்து இதே மாதிரியான நிதியை கொண்டு வருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை கொண்டு வருவதற்கு நாம் தான் கஸ்டப்பட வேண்டும்.

ஆனால் இனி யார் அதனை செய்யப் போகின்றார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. அந்த பணம் எமது மாகாணத்திற்கு கிடைக்கா விட்டால் இந்த இடையூறை செய்தவர்களே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

நானோ தற்போது சட்டரீதியான சுகாதார அமைச்சர் எனது கடிதத்தினை ஆளுனர் ஏற்று அதனை அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்னர் புதிய அமைச்சர் யார் வரப் போகின்றனர் என்பது தெரியவில்லை.

முதலமைச்சரை சுற்றி நல்ல திறமையான அமைச்சர்கள் வருவதற்கான சூழல் உள்ளது. அந்த திறமையான அமைச்சர்கள் வந்து இந்த வேலைகளை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அந்த அமைச்சர்களும் இதனை செய்யாவிட்டால் அந்த பொறுப்பையும் முதலமைச்சர் தனது தலையில் தூக்கி வைக்க வேண்டும். அவர் அதனை தூக்கி தனது தலையில் வைப்பார் என்றே நினைக்கின்றேன்.

30 வருட யுத்ததில் பாதிக்கப்பட்ட மக்கள் இனியாவது அடிப்படை வசதிகளுடன் வாழக்கூடிய வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கும் அவரின் கீழ் வரும் 38 உறுப்பினர்களுக்கும் உள்ளது.

எங்கு தலைமைத்துவம் பிழைக்கின்றதோ அங்கு எல்லாம் பிழைகள் நடக்கும். அதுவே எங்கள் மாகாணத்திலும் இடம்பெறுகின்றது.

முதலமைச்சர் மீண்டும் மீண்டும் பிழையான முடிவுகளை எடுத்து எந்த நம்பிக்கையுடன் வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதோ அந்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் முதலமைச்சர் செயற்பட்டமை மிகவும் மனவேதனைக்குரியது.

தனிப்பட்டவர்கள் வரலாம் போகலாம். ஆனால் இயற்கையின் விதிப்படி இந்த மக்களுக்கு நல்லதே நடக்கும் என்றார்.

You might also like