வவுனியாவில் பதிவு செய்யப்படாத வைத்தியசாலை சுகாதாரப் பரிசோதகர்களால் சுற்றிவளைப்பு

வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை இன்று (15.08.2017) மதியம் 12.30மணியளவில் வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினர் அதிரடியாக சுற்றிவளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலை சில காலமாக வவுனியாவில் இயங்கி வந்த நிலையில் சுகாதாரப் பரிசோதகர்களால் சுற்றுவளைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் மருந்துப்பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பு குறித்து கருத்து தெரிவித்த வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன்,

குறித்த வைத்தியசாலையானது எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை அடுத்து இந்த மருந்து வகைகள் எவ்வாறானவை என்று தெரியவில்லை அதன் காரணமாக மருந்துகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் மருந்துகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது என குறிப்பிட்டார்.

குறித்த வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ் கருத்து தெரிவிக்கையில்,

எனது வைத்தியசாலை கோமியோபதி வைத்திய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க வர்த்தமானியில் பெயர் இருப்பதாக குறிப்பிட்ட வைத்தியர் கிளிநொச்சி மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளில் தங்கள் கோமியோபதி வைத்தியசாலை இயங்கிவருவதாகவும் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

You might also like