கிளிநொச்சியில் யுத்தம் நிறைவு பெற்ற போதும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை: மக்கள் கவலை

யுத்தம் நிறைவு பெற்று பல ஆண்டுகள் கடந்த போதும் அபிவிருத்திகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என கிளிநொச்சி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் பல குளங்கள் காணப்படுகின்ற போதிலும், குறித்த குளங்களை அபிவிருத்தி செய்து விவசாயம், நன்னீர் மீன்பிடிகளை ஊக்குவிப்பதுடன், நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும் என்பதே எமது முன்னோர்களின் எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு பல குளங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவை அபிவிருத்தி செய்யப்படாமையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டே வருகின்றனர்.

சின்ன பல்லவராயன் கட்டு குளத்தினை நம்பி 300 ற்கும் மேற்பட்ட சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனால் 300 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து வரும் நிலையில் 100 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குளத்தின் முதலாம் கட்ட அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பிற்பட்ட காலத்தில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் 321 ஏக்கர் செய்கை கைவிடப்பட்டதுடன், நன்னீர் மீன்பிடியும் பாதிக்கப்பட்டுள்ளது.

குளத்தை ஆழப்படுத்தி குடமுருட்டி ஊடாக செல்லும் மழை நீரை முழுமையாக தேக்குவதற்கான அடுத்த கட்ட அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுமாயின் அந்த பகுதியில் மேலும் அதிக செய்கை செய்யப்படும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

குறித்த குளம் தற்போது வற்றிய நிலையில் உள்ளதுடன், இவ்வாறு தொடரும் வறட்சி காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினை பாரிய சவாலாகவே காணப்படுதாக மக்கள் கூறியுள்ளனர்.

குளத்தினை அபிவிருத்தி செய்தால் நல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளிற்கு சிறுபோக செய்யை பண்ணக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினையை சற்றேனும் தீர்க்க முடியும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மாவட்டத்தின் பல குளங்கள் போதுமான அபிவிருத்திகள் இல்லாது தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு சவால்கள் அமையும்.

வடக்கின் இதயம் எனவும், விவசாய மாவட்டம் எனவும் அழைக்கப்படும் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் மும்மொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வியலாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.

You might also like