டெனீஸ்வரனுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஆதரவு

வடமாகாண சபை அமைச்சுக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் பதவி விலகக் கோருவது ஜனநாயக பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடுகள் என ஜனநாயக போராளிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தாயகத்தின் வடக்கில் இடம்பெறும் பதவிசார் அரசியல் பூசல்கள் தாயகத்தில் இதுவரை செய்யப்பட்ட எண்ணிலடங்கா தியாகத்தின் மீது சேற்றை வீசுவதற்கு சமனானது.

மக்கள் பொருண்மியம், தாயக நலன் பற்றிய பொறுப்புணர்வு இல்லாமல் முதலமைச்சர் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவே நாம் நம்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மக்களின் வாழ்வியல் பண்பாட்டியல் மற்றும் அரசியல் எழுச்சிக்கு வித்திடாமல் வெறும் அமைச்சரவைக்கான வாதப் பிரதிவாதங்களால் மிச்சமுள்ள காலத்தை கடத்த முதலமைச்சர் அடங்கிய வடமாகாண சபை முயற்சிப்பது மிகவும் கடுமையான யுத்த விளைவுகளை எதிர்கொண்டு மீட்சிபெற முயற்சிக்கும் எமது இனத்திற்கு எதிரான செயற்பாடாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக வடமாகாண அமைச்சர் பாலசிங்கம் டெனீஸ்வரனை பதவி விலக நிர்ப்பந்திப்பது ஜனநாயக மற்றும் அதனடிப்படையிலான பொறிமுறைகள் மேல் கை வைப்பதற்கான முதலமைச்சரின் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பதற்கு காரணமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது.

கடந்த கால செயற்பாடுகளில் பா.டெனீஸ்வரன் மாவீரர் போராளிகளது குடும்ப பொருண்மிய மேம்பாடு சமூக அபிவிருத்தி செயற்பாடுகளை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவில் கொள்கின்றோம்.

அவருக்கெதிராக ஜனநாயக விழுமியங்களை மீறி எடுக்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு அவரது தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி தமது ஆதரவினையும் தெரிவித்துள்ளனர்.

வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மக்களை அணிதிரட்டி தாயக ஜனநாயகத்திற்கான மாபெரும் மக்கள் போராட்டங்ளை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை எமக்கு ஏற்படுத்த வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளதுடன், சட்டம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை மதித்து வடமாகாண சபையும் அதன் தலைமைத்துவமும் பயணிக்குமா? என்ற நியாயப்பாடான சந்தேகம் உள்ளது.

மக்கள் பணியை நிறைவேற்றாத மாகாண சபையாக நீங்கள் வரலாற்றில் இடம்பிடிப்பதற்கான தனது முயற்சியில் வடக்கு முதல்வர் “எடுப்பார் கைப்பிள்ளை” போல் செயற்படுகின்றமை ஜனநாயக முறைமைக்கு திரும்பியுள்ள எமக்கும் தாயக மக்களுக்கும் வருத்தமளிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்னர்.

You might also like