குற்றவாளிகளுக்கு ஜெர்மனியில் இருந்து பணம் வருகின்றது! முதலமைச்சரிடம் பொலிஸார் தெரிவிப்பு

குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் ஒருவர் ஜெர்மனியில் இருப்பதாகவும், அதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில் இன்று காலை 2வது தடவையாக சந்திப்பு நடைபெற்றிருந்தது.

இந்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் இன்று என்னை சந்தித்தார்கள். சென்ற முறை கலந்துரையாடிய விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக பேசிக் கொண்டோம்.

சென்ற தடவை நடைபெற்ற கலந்துரையாடலின் போது பல விடயங்கள் தொடர்பில் கதைத்திருந்தோம். சென்ற தடவையை விட ஒரு மாதத்தில் நல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆவா குழுவினருடன் தொடர்புடைய பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.

நீதிமன்றங்களில் குடும்ப சச்சரவு அதிகம் உள்ளது. என்னுடைய காலத்தில் குடும்ப ஆலோசகர்கள் பலர் இருந்தார்கள். அவ்வாறான நிலைமை இன்று இல்லை.

இதேவேளை குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து உதவுவோர் தொடர்பாக கடந்த கூட்டத்தில் பேசப்பட்டமைக்கு அமைய இன்றும் அது தொடர்பில் பேசப்பட்டது.

அப்போது பொலிஸார் இது தொடர்பான விபரங்களை சேகரித்து வருவதாகவும், இந்த விடயத்தில் இன்டபோல் உதவியை கேட்கவுள்ளதாகவும் கூறினார்.

இவ்வாறு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பும் ஒருவர் ஜெர்மனியில் இருப்பதாகவும் அதனை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பதாகவும் பொலிஸார் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

You might also like