கிளிநொச்சியை டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக கூடும் அபாயம்

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பூச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்கு நோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தை மாதத்திலிருந்து இன்றுவரையான (15.08.2017) 227 நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மொத்தம் 815 நோயளர்கள் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டது.

இவர்களுள் 585 நோயாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் பிறமாவட்டத்தைச்சேர்ந்தவர்கள். என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் உள்ள 585 கிளிநொச்சி மாவட்ட நோயாளர்களில் அனேகமானோர் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து டெங்குநோய் தொற்றிய நிலையில் கிளிநொச்சிக்கு வந்து சிகிச்சைபெற்றவர்களாவர். இவர்களுள் ஒருவர் டெங்குநோய் காரணமாக மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சராசரியாக நாளொன்றிற்கு டெங்குநோய்த்தொற்றுக்கு ஆளாகிய நிலையில் குறைந்தது மூன்றுபேர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குத் தினமும் வெளிமாவட்டங்களிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

இவ் நெருக்கடியான நிலையில் மாவட்டத்தின் மக்களைப் பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சி சுகாதாரப் பிரிவினர் சிறு செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிடுள்ளனர்.

குறித்த செய்திக் குறிப்பில்,

புகையிரத நிலையங்கள், பேரூந்து நிலையங்கள், வைத்தியசாலைகள், உணவகங்கள் ஆகிய இடங்களை பொதுமக்கள் பாவிக்கும்போது அவ்விடங்களில் டெங்கு நுளம்புகள் காணப்படுமாயின் அவைடெங்கினால் பாதிக்கப்பட்ட நோயார்களின் டெங்கு வைரசு கலந்த இரத்தத்தினை உறிஞ்சிக்கொள்ளலாம்.

இவ்வாறு டெங்கு வைரசின் தாக்கம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களிடம் இருந்து டெங்கு வைரசு கலந்த இரத்தத்தினைக் கிளிநொச்சியில் காணப்படும் டெங்கு நுளம்புகள் உறிஞ்சுமாயின், அந்த நுளம்புகளினால கடிக்கப்படும் அனைவரும் டெங்குநோயாளிகளாக நேரிடும்.

இதனால் கிளிநொச்சி மாவட்டத்தினுள்ளே டெங்கு காட்டுத் தீ போலஅதிதீவிரமாகப் பரவத்தொடங்கும்.

இந்த அபாயநிலையைக் கருத்தில் கொண்டு இம்மாதம் 16,17,18 ஆகிய தினங்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் இனங்காணப்பட்ட பொது இடங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் தத்தமது பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்புகொண்டு இந்த உயிர்காப்புப் பணியில் ஈடுபட முன்வருமாறு வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like