முல்லைத்தீவு நந்திக்கடல் பிரதேசத்தை விடமுடியாது – இராணுவம்!
முல்லைத்தீவு மாவட்டம் நந்திக்கடல் பிரதேசம் தமது பாதுகாப்புத் தேவைக்கு அவசியமானது எனவும் அதனை விடுவிக்கமுடியாது எனவும் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், குறித்த பகுதியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
கேப்பாப்புலவு கிராமத்தின் ஒருபகுதியை எதிர்வரும் 25ஆம் நாள் விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் கேப்பாப்புலவு கிராம அபிவிருத்தித் தலைவர்கள் மற்றும் கிராமத் தலைவர்களை அழைத்த இராணுவத்தினர் காணிவிடுவிப்புத் தொடர்பாகக் கலந்துரையாடியபோதே நந்திக்கடல் பிரதேசத்தை தாம் விடுவிக்கப்போவதில்லையென்பதையும் தெரிவித்திருந்தனர்.
அத்தோடு, படை முகாம் அங்கிருந்து அகற்றப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த காணி மக்களிடம் கைளிக்கப்படும் எனவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தில் நந்திக்கடலிலே பல உயிர்கள் இராணுவத்தினரால் காவுகொள்ளப்பட்டதுடன், மனித உரிமை மீறல் நடைபெற்ற இடமும் இதுவாகும். இது தமிழ் மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவமிக்க இடமுங்கூட.