மதத்தை மீறி காதலனை கரம் பிடித்த காதலி: நடந்த சோகம்

பாகிஸ்தான் ஆகஸ்ட் 14ஆம் திகதி சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் நிலையில், இந்தியா ஆகஸ்ட் 15ஆம் திகதி கொண்டாடுகிறது.

பிரித்தானியா ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்த போது பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு பலரின் வாழ்க்கை திசையே மாறி போனது.

அப்போது ஒரு உண்மை காதல் கதை அரங்கேறியது.

காதலில் இணைவதற்காக மதத்தையும் நாட்டையும் மாற்றிய பிறகும், அரசாங்கத்துடன் போராடிய காதல் ஜோடியின் கதை இது!

விடுதலைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னார் 1946ல் காஷ்மீருக்கு இரு குடும்பங்கள் சுற்றுலா சென்றது.

அதில் ஒன்று ராவல்பிண்டி படான் இஸ்லாமிய குடும்பம், இன்னொன்று அமிர்தசரஸின் லாலாஜி இந்து குடும்பம்.

படான் குடும்பத்தின் இஸ்மத்துக்கும் (15) லாலாஜி குடும்பத்தின் ஜீதுவுக்கும் (17) அங்கு காதல் மலர்ந்தது.

பிரிவினை புயலால் தனது காதலனுடன் சேருவது கடினம் என்பதை இஸ்மத் புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இந்துக்களின் அகதி முகாமுக்கு வந்தார்.

அங்கு, தான் ஒரு இந்து பெண் என பொய்யாக கூறினார். மேலும், பெற்றோரை தொலைத்து விட்டதாகவும் தன்னை இந்தியாவில் கொண்டு விடும் படியும் இஸ்மத் கூறினார்.

பிரிவினைக்கு பிறகு இரண்டு மாதங்கள், இரு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் கடத்தப்பட்டனர் பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.

இதனால் இரு நாட்டு அரசுகளும் சேர்ந்து, காணாமல் போன பெண்களை தேடி மீண்டும் அவர்களின் குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்கும் திட்டத்தை தொடங்கினார்கள்.

இதற்கான பொறுப்பில் சமூக சேவகி கமலா படேல் நியமிக்கப்பட்டார்.

பிறகு, இஸ்மத்தை இந்து என நம்பிய கமலா அவரை அமிர்தசரஸில் உள்ள காதலன் ஜீது விட்டுக்கு அனுப்பினார்.

அங்கு ஜீதுவின் பெற்றோர் அனுமதியுடன் அவருக்கும், இஸ்மத்துக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில், தங்கள் மகள் கடத்தப்பட்டுள்ளதாக இஸ்மத்தின் பெற்றோர் பாகிஸ்தான் அரசிடம் புகார் அளித்தனர்.

இதையறிந்த இஸ்மத் தனது காதல் கல்யாணம் குறித்து கமலாவிடம் பேசினார். தான் கடத்தப்படவில்லை எனவும் விருப்பப்பட்டே இந்தியாவுக்கு வந்து ஜீதுவை திருமணம் செய்ததாக கூறினார்.

ஆனால் பாகிஸ்தான் அரசு, பொறுப்பில் உள்ள கமலாவுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தது. பிறகு இஸ்மத்திடம் பேசிய கமலா,ஒரு வாரத்திற்கு மட்டும் லாகூருக்கு செல்லும்படி அறிவுறுத்தினார்.

அங்கிருக்கும் காவல்துறையிடம் உன் விருப்பத்தை கூறி விட்டு நீ சட்டப்படி இந்தியா வந்து விடலாம் என கூறினார்.

அழுத்தம் காரணமாகவே கமலா இந்த முடிவை எடுத்தார்.

பின்னர், இஸ்மத்தை லாகூரில் ஒப்படைத்த ஜீது, காதல் மனைவியின் வருகையை எதிர்பார்த்து நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார்.

பிறகு இஸ்மத்தை அவர் பெற்றோர் அழைத்து சென்று விட்டர்கள் என கமலாவுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து பாகிஸ்தான் சென்ற கமலா இஸ்மத்தை சந்தித்து பேசினார். ஆனால் அவரின் குணம் முற்றிலுமாக மாறியிருந்தது.

ஜீதுவின் பெயரை கேட்டதுமே சீறிவிழுந்த இஸ்மத், அந்த நாஸ்திகனின் முகத்தை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை, என்னால் முடிந்தால் அவனை வெட்டி துண்டுகளாக்கி நாய்களுக்கு இரையாக போடுவேன் என கூறி அதிர்ச்சியளித்தார்.

கமலா எவ்வளவு கூறியும் இஸ்மத் மனம் மாறவில்லை. பிறகு தனது மனைவியை தேடி ஜீது பாகிஸ்தான் சென்றார். ஆனால் அவரால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரின் காதலும் முடிந்து போயிருந்தது.

ஐந்து ஆண்டுகள் கழித்து ஜீதுவை கமலா பார்த்த போது அவர் நோய் வாய்ப்பட்டு நொடிந்து போயிருந்தார்.

இது போல ஆயிரம் கதைகள் இரு நாடுகள் பிரிவினையின் போது இருந்திருக்கலாம். ஆனால் கமலா, தான் எழுதிய ‘Torn from the Roots: A Partition Memoir’ என்ற புத்தகத்தில் இவர்களின் காதல் கதையை மட்டும் எழுதியுள்ளார்.

இதோடு, இரு நாடுகளின் பெண்கள் அதிகளவில் கடத்தப்பட்டு மதம் மாற்றப்பட்டதை குறிக்கும் வகையில், ஆப்பிள், ஆரஞ்சு போன்று பெண்கள் அங்கும் இங்கும் மாற்றப்பட்டனர் என புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like