வாள் வெட்டு சம்பவங்களின் பின்புலத்திலுள்ள உண்மைகள்!

யாழ். குடா நாட்டில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பயனாக வாள்வெட்டு சம்பவங்கள் குறைவடைந்துள்ளதோடு, மக்கள் மத்தியில் நிலவி வந்த அச்சம் பீதியும் குறைவடைந்துள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸார் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

யாழ். குடா நாட்டின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் விஷேட சந்திப்பொன்றை நடத்தினார். இச்சந்திப்பின் போது பொலிஸார் இந்தத் தகவலை குறிப்பிட்டு இருக்கின்றனர்.

யாழ். மாவட்ட பொலிஸார் உயரதிகாரிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்துள்ளது. இச்சந்திப்பின் போது மேலும் பல முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

குறிப்பாக யாழ். குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூகவிரோத குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி அவர்களோடு இக்குற்றச்செயல்களில் தொடர்புபட்ட நபர் ஒருவர் ஜேர்மனியில் இருப்பதாகவும், இந்த ஆவா குழுவினருக்கு வேறு சிலர் மூலமும் நிதி உள்ளிட்ட உதவிகள் கிடைக்கப் பெறுவதும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

ஒரு வருட காலத்துக்கு மேலாக யாழ். குடாநாட்டில் வாள்வெட்டுச் சம்பவங்கள் நீடித்து வந்தன. அதன் உச்ச கட்டமாக கடந்த மாத இறுதியில் இரு பொலிஸாரை இலக்கு வைத்து வாள்வெட்டு நடாத்தப்பட்டது.

வாள்வெட்டு சம்பவங்களை முன்னெடுக்கும் குழுவினர் தொடர்பில் ஏற்கனவே புலன் விசாரணைகளை ஆரம்பித்திருந்த பொலிஸாருக்கு இந்தச் சம்பவம் உத்வேகத்தை அளித்தது. அதன் அடிப்படையில் பொலிஸார் புலன் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியதோடு, சுற்றிவளைப்புக்களையும் தேடுதல்களையும் ஆரம்பித்தனர்.

இதன் பயனாக சொற்ப காலத்துக்குள் 600 க்கு மேற்பட்ட வாள்களும், 250க்கும் மேற்பட்ட கத்திகளும் யாழ். குடாநாட்டில் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு ஆவா குழு உறுப்பினர்கள் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வழங்கியுள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில் புலன் விசாரணைகளையும், தேடுதல்களையும் பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.இதன் அடிப்படையில்தான் ஆவா குழுவினருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி உள்ளிட்ட உதவிகள் வந்து சேருவது தெரியவந்துள்ளது.

அதனால் இக்குழுவினருக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் உள்ளிட்ட உதவிகளை வந்து சேருவது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவென சர்வதேச பொலிஸான ‘இன்டபோலின்’ உதவியை நாடவும் பொலிஸ் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொள்ளும் இந்நடவடிக்கைகளை வட பகுதி மக்கள் மாத்திரமல்லாமல் சகல மக்களுமே வரவேற்கின்றனர். பொலிஸாரின் இந்நடவடிக்கையின் பயனாக ஒருபுறம் வாள்வெட்டுச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளதோடு, அச்சம் பீதி நீங்கவும் தொடங்கியுள்ளது.

அதேநேரம் இவ்வாறு உருவாகும் குழுக்கள் எதிர்காலத்தில் ஆயுதங்களை ஏந்தி மீண்டுமொரு தடவை நாட்டை ஆயுதப் போராட்டத்துக்குள் நாடு தள்ளி விடுவதை தவிர்க்கவும் இந்நடவடிக்கைகள் நிச்சயம் வழிவகுக்கும்.

ஏற்கனவே தோற்றம் பெற்ற ஆயுதப் போராட்டம் காரணமாக இந்நாட்டு மக்கள் சுமார் 30 வருடங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள் .அவ்வாறான ஒரு நிலைமைக்கு மீண்டும் முகங்கொடுப்பதற்கு வட பகுதி மக்கள் உள்ளிட்ட எவரும் சொற்பளவேனும் தயாரில்லை.

அதனால் சட்டம் ஒழுங்கை கையிலெடுப்பதற்கு எவருக்கும் அனுமதித்தலாகாது. அதற்கு இடமளிக்கப்படுமாயின் அது நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் தள்ளி விடும்.

அதேநேரம் இவ்வாறான குழுக்களின் ஊடாக இந்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் அற்ப நலன்களை அடைந்து கொள்வதற்கு வெளிநாடுகளிலுள்ள ஒரு சிலர் முயற்சி செய்கின்றனர் என்பது நன்கு தெளிவாகியுள்ளது.

அவர்களது நலன்களுக்காக தாய்நாட்டில் வன்முறையையும் குழப்பகர நிலைமையையும் தோற்றுவிப்பதற்கு ஒரு போதும் துணை போகவும் கூடாது. அவர்களது சதி சூழ்ச்சிகளில் சிக்குவதானது தம்மைத் தாமே அளித்துக் கொள்வதோடல்லாமல் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகவும் அது அமையும்.

ஏற்கனவே இந்த நாடு விலை மதிக்க முடியாத இரத்தத்தை போதுமானளவுக்கு சிந்தி விட்டது. இனியும் அவ்வாறு சிந்துவதற்கு இந்நாடே தயாரில்லை.

30 வருடங்களுக்குப் பின்னர் யாழ். குடநாட்டில் மாத்திரமல்லாமல் முழு நாட்டிலும் உருவாக்கப்பட்டிருக்கும் அமைதி சமாதானத்தை சீர்குலைக்க ஒருபோதும் துணை போகலாகாது. அது மற்றொரு பேரழிவுக்குஉதவுவதாகவே அமையும்.

ஆகவே சட்டம் ஒழுங்கை மதித்து நடப்பது ஒவ்வொரு குடிமகனினதும் பொறுப்பாகும். இப்பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியது அவரவர் கடமை. அதேநேரம் வெளிநாட்டிலுள்ளவர்களின் நலன்களுக்காக தாய்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் கூடாது.

அத்தோடு சட்டம் ஒழுங்கை எவரும் கையிலெடுப்பதற்கு இடமளிக்கவும் கூடாது. அதற்கான பொறுப்பும் கடமையும் பொலிஸாருக்கும் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் உள்ளது.

You might also like