வடமாகாண போக்குவரத்து அமைச்சருடன் ஒன்றிணைந்து சேவையாற்ற முதலமைச்சருக்கு அழைப்பு

வடமாகாணத்தை வீதி விபத்துக்களற்ற மாகாணமாக்குவதற்கு வடமாகாணப் போக்குவரத்து அமைச்சருடன் ஒன்றிணைந்து சேவையாற்ற முன்வருமாறு வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை(16) வடமாகாண முதலமைச்சருக்கு மேற்படி சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

20.07.2017 ஆம் திகதியிடப்பட்டுத் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தினை இயங்கச் செய்வதற்குக் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறோம்.

நீண்டகாலமாகத் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும், இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் முரண்பாடுகளினைத் தீர்ப்பதற்கென வடக்கில் இணைந்த நேர அட்டவணையினை நடைமுறைப்படுத்துவதற்கும் வடமாகாணப் போக்குவரத்து அமைச்சரும், அமைச்சின் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றாரெனவும் எனவே தற்போதுள்ள போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரனை மாற்றுமாறு அவர் சார்ந்த கட்சியினால் தங்களிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கையினை மீள்பரிசீலனை செய்யுமாறும் தயவாகக் கேட்டிருந்தோம். இருந்தும் தாங்கள் எமது கடிதத்திற்கு எந்தவொரு தீர்வும் தரவில்லை.

இவ்வாறு பல தடவைகள் தங்களை எமது நிர்வாகத்தினர் சந்திப்பதற்கு முயற்சித்தும் பலனற்றுப் போனதோடு எமது போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பாக கெளரவ போக்குவரத்து அமைச்சர் கடின உழைப்பின் மத்தியில் மக்களின் ஒரு சிறந்த போக்குவரத்துச் சேவையினை உருவாக்குவதற்காகவும் வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினை உருவாக்கி அதன் ஊடாக இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும், தனியார் பேருந்துச் சபையினருக்கும் 60:40 என்ற விகிதாசார அடிப்படையில் போக்குவரத்தினைச் சீர் செய்வதற்கு கைகூடி வரும் வேளையில் ஊடகங்கள் வாயிலாக கெளரவ போக்குவரத்து அமைச்சரை மாற்றம் செய்யப் போவதாகக் கிடைக்கப் பெறும் செய்திகளால் வடமாகாணத்தில் பேருந்துச் சேவையினை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, போக்குவரத்து அதிகார சபையிலிருக்கும் நம்பிக்கையும் அற்றுப் போவதனையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

எமது மக்களுக்குச் சிறந்த போக்குவரத்துச் சேவையினைச் செய்ய வேண்டும் எனும் நோக்கத்திற்காகவும், எமது பிரச்சினையினைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கெனவும் மற்றும் வவுனியாவின் புதிய பேருந்துத் தரிப்பிடத்தினை மீளவும் செயற்படுத்துவதற்கெனவும் ஒரே தரிப்பு நிலையத்தில் இருந்தே இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான சேவைகளினை ஆற்ற வேண்டுமென்ற கொள்கையினையும் நோக்காகக் கொண்டு கடந்த 09.02. 2017 ஆம் திகதியன்று தங்களைச் சந்திப்பதற்குப் பேரணியாகத் திரண்டு வந்தும் எங்கள் முயற்சி பலனற்றுப் போனது.

மேலும், மீண்டும் புதிதாக நியமிக்கப்படும் போக்குவரத்து அமைச்சர் ஆரம்பத்திலிலிருந்து கட்டம் கட்டமாகத் தனது பணியினைச் செயற்படுத்தி வரும் பட்சத்தில் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனால் ஊக்குவித்த போக்குவரத்துச் சேவையினை நம்பி ஜீவனோபாயத்தில் முன்னேற்றமடைந்து வரும் உரிமையாளர்களும், அவர்களை நம்பி வாழும் தொழிலாளர்களின் குடும்பங்களும் மீண்டும் பின்தள்ளப்படுவார்கள் என்பதனையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

அத்துடன் 20.07.2017 ஆம், திகதியிடப்பட்டுத் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதியினை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதனுக்கும் அனுப்பியிருந்தோம்.

அதன் பிரதிபலனாக 20.07.2017 திகதியிடப்பட்டு அவரூடாக எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள ஆவன செய்வேன் என அறியத் தந்திருந்தார். இருந்தும் அவருடைய வாக்குறுதி பயனற்றுப் போயுள்ளதாக நாம் கருதுகின்றோம்.

வடமாகாணத்தை வீதி விபத்துக்களற்ற மாகாணமாக்குவதற்கு வடமாகாணப் போக்குவரத்து அமைச்சருடன் ஒன்றிணைந்து சேவையாற்றத் தங்களினை விநயமாகக் கேட்டுக் கொள்வதோடு, மேற்குறிப்பிட்டவற்றைத் தாங்கள் மீள் பரிசீலனை செய்வதுடன் தங்களை எமது போக்குவரத்துச் சமூகம் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும், குறைநிறைகளைத் தீர்ப்பதற்கும் 26.08.2017 ஆம் திகதிக்கு முன்பதாக நேரம் ஒதுக்கித் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதுடன், தங்களுடன் கலந்துரையாடுவதற்குச் சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் ஜனநாயக ரீதியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக உள்ளோம் என்பதனைத் தங்களின் மேலான கவனத்திற்குத் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like