துன்னாலைக் குழப்பங்களின் பிரதான சூத்திரதாரி கைது! 17 பேருக்கு வலைவீச்சு

யாழ். வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக்காட்டுப் பகுதியில் நேற்றுப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற குழப்ப நிலைக்குக் காரணமான குழுவின் தலைவர் அவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளதாம்.

அண்மையில், மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டோர் எனச் கருதப்படுபவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன் பொலிஸ் காவலரணும் அடித்து நொருக்கப்பட்டது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக வீதிகளில் டயர்கள் கொளுத்தப்பட்டன.

இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் 78 பேர் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 40 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 38 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைத் தாம் தேடி வருவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்

You might also like