கிளிநொச்சியில் டெங்கு பரவும் சூழல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை: சுகாதார பிரிவினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்பு வளரும் சூழல் காணப்பட்டால் அந்த சூழல் காணப்படுகின்ற இடத்தின் உரிமையாளர் மீது நாளை முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மாவட்டத்தின் பல இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இன்று பொது மக்கள் மற்றும் படையினர் ஆகியோர் பங்குகொண்டு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நாளை வியாபார நிலையங்கள் பொது இடங்கள் என்பன ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றில் டெங்கு நுளம்பு வளரும் சூழல் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட பணிப்பிற்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் இதற்காக கொழும்பிலிருந்து சுகாதார அமைச்சின் விசேட குழுவொன்று கிளிநொச்சிக்கு வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தை மாதத்திலிருந்து இன்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மொத்தம் 815 நோயாளர்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவர்களுள் 585 நோயாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் பிறமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

You might also like