இரணைமடுவில் இருந்து நீர் தர மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்! வடமாகாண சபையில் குற்றச்சாட்டு

வடக்கு மாகாணம் கடுமையாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரணைமடுவில் இருந்து நீர் தர மாட்டேன் என கூறியுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணம் வறட்சியான காலநிலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரித்துள்ளார்.

மேலும் குடி நீர் தட்டுப்பாட்டை வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் இடம்பெற்று வரும் நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரணைமடுவில் இருந்து நீர் தர மாட்டேன் என கூறியுள்ளார்.

அதேபோன்று நடுவங்கேணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நீர் தர மாட்டேன் என கூறுகின்றார். இந்நிலையில், மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் தட்டுப்பாட்டிற்கு மாற்றுத்திட்டம் என்ன?

வெளிநாட்டு நிபுணர்களை அழைத்து வந்து மாகாண நீர் கொள்கை ஒன்றை உருவாக்கியிருந்தீர்கள். அந்த கொள்கை எங்கே?” எனவும் அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், “குறித்த விடயம் தொடர்பில் அடுத்த அமர்வின் போது அறிக்கை சமர்பிக்கப்படும்” என கூறியுள்ளார்.

இதனையடுத்து தொடர்ந்தும் பேசிய எம்.கே.சிவாஜிலிங்கம், “குடி நீர் தட்டுப்பாடு காரணமாக நெடுந்தீவு பகுதியில் மக்கள் மாத்திரமல்லாது, விலங்குகளும் உயிரிழக்கின்றன.

நெடுந்தீவு பகுதியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் ஒன்று உள்ளது. அதனை விரிவாக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த திட்டம் காரணமாக நெடுந்தீவு பகுதியில் பாதிப்பு ஏதும் ஏற்பட போவதில்லை. மீன்களும் இறக்க போவதில்லை.

இதேவேளை, நெடுந்தீவு பகுதியில் அவ்வாறான திட்டம் ஒன்றை நடைமுறைபடுத்த முடியுமாக இருந்தால், மருதங்கேணியில் ஏன் அவ்வாறான திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது?

எனவே, சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் விரைவில் விசேட அமர்வு ஒன்றை நடத்த வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like