தேர்தலில் வெற்றிபெறும் பெண்களை கண்டால் அரசியல் தலைமைகள் தமது அசனம் போய்விடும் என்ற பயத்துடன்

தேர்தலில் வெற்றிபெறும் பெண்களை கண்டால் அரசியல் தலைமைகள் தமது அசனம் போய்விடும் என்ற பயத்துடன் இருப்பதாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

வவுனியாவில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிக்கன கடன் கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் இன்று (18.08.2017) காலை 10.00மணிக்கு இடம்பெற்ற இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் என்ற வகையில் 5 மாவட்ட அரசாங்க அதிபர்களையும் பிரதேச செயலாளர்களையும் நேரடியாக சந்தித்து ஒருமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளேன். மக்களுக்கான சேவையில் நாங்கள் பிரிந்துநின்று சேவை  ஆற்றமுடியாது.

இன்று வடக்கிற்கு வரும் அபிவிருத்தி திட்டங்கள் எல்லாவற்றையும் மத்தியே தீர்மானிக்கின்றது. அந்த நபர்கள் தீர்மானித்து கொண்டு வரும் பல அபிவிருத்தி திட்டங்கள் இங்கு தோற்றுப்போகின்றது. ஆகவே வடக்கு மாகாணத்துடன் சேர்ந்தே இந்த அபிவிருத்தியை செய்யுங்கள் என கூறும்போது அவ்வாறான உடன்பாட்டுக்கு அரசாங்கம் வர தயாராக இல்லை.

எங்களிடம் உள்ள நிதியோ மிக சொற்பமான நிதி. ஆனால் தேவை நிறையவே உள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்கள் மாகாணத்தினையும் ஏனைய தென் மாகாணங்களையும் ஒரே தராசில் வைத்து பார்க்கமுடியாது. நாங்கள் அடி மட்டத்தில் இருந்து கட்டியெழுப்பப்பட வேண்டியவர்களாக உள்ளோம். இது தொடர்பாக பலமுறை நாங்கள் மாகாணசபையிலும் பேசியிருக்கின்றோம். ஜனாதிபதி பிரதமருடன் பலமுறை பேசியும் அவர்கள் அதனை விட்டுக்கொடுப்பதாக இல்லை.

ஆகவே நாங்கள் எங்களிடம் உள்ள நிதியில் சேவை செய்வதுடன் சந்திக்கும் வெளிநாட்டு தூதுவர்களுடாக சில திட்டங்களை கோர உள்ளோம். அவர்கள் நிச்சயமாக அதனை செய்வார்கள். எங்களுடைய கலாசாரத்தினை மீறிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முடியாது. எங்களுடைய கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காக்கும் அபிவிருத்திகளை என்றும் நாம் எதிர்ப்பதில்லை. ஆனால் அதனை செய்ய விடாமல் பல தடைகள் வந்துகொண்டிருக்கின்றது.

உண்மையாகவும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் மக்களுக்கு சேவைசெய்வேன் என்பதனால் 5 திணைக்களங்களை உள்ளடக்கி எனக்கு அமைச்சுப்பதவி தரப்பட்டுள்ளது. நிச்சயமாக என்னால் முடியும். ஏனெனில் நான் போரின் முடிவில் நிராயுதபாணியாக எனது கணவரை கையளித்துவிட்டு 3 பெண் பிள்ளைகளுடன் தாயாக தந்தையாக நண்பியாக சகோதரியாக என எல்லா பாத்திரத்தையும் வகித்துள்ளேன்.

ஒரு பெண் கணவன் இல்லாமல் எவ்வாறு தன்னையும் பாதுகாத்து தனது பிள்ளைகளையும் பாதுகாத்து வாழ முடியும் என்பதனை அனுபவ ரீதியாக உணர்ந்தவள். ஆகவே பெண்களின் பிரச்சனையை புதிதாக யாரும் செல்லத்தேவையில்லை.

போரின் பின்னரான அதிகளாவான பாதிப்புக்குள்ளான வட மாகாண மகளிருக்கான தனியான திணைக்களமோ அல்லது அலகோ இல்லை. ஆகவே நாங்கள் அதனை ஒரு பகுதியாக ஆரம்பிப்பதற்கு திட்டமொன்றினை தயாரிக்கின்றோம்.

வட மாகாணத்தில் பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றார்கள். ஆகவே அதற்கான அலகு வட மாகாணத்தில் இயங்கவேண்டும். தென்னிலங்கையில் இருந்து யார் யாரோ பெண்கள் அமைப்புக்கள் வருகின்றார்கள். பேசுகின்றார்கள் என்ன செய்கின்றார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சர்வதேச நிதிமூலங்களை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்காளக உள்ளார்கள். போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நிதியீட்டம் என் பெற்றுக் கொண்டு எமது பெண்களுக்கு எதனையும் செய்ததாக தெரியவில்லை.

ஆகவே நாங்கள் கட்டுப்பாட்டை கொண்டு வரவேண்டும். வடக்கில் அரசசார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றது என்றால் அது வட மாகாணசபையில் அனுமதியை பெற்றிருக்கவேண்டும். ஆகவே தான் எங்களுக்கு வழங்கப்படும் நிதி எங்கெ செல்கின்றது என்பது தெரியும்.

நாங்கள் மகளிர் விவகார கொள்கையை வகுத்துள்ளோம். புனர்வாழ்வு தொடர்பாக புனர்வாழ்வு அமைச்சரை நேரடியாக சென்று சந்தித்து போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களுக்கு விசேட வேலைத்திட்டத்தினை செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.

அத்துடன் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் அழுத்தங்களை கொடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளேன். இந் நிலையில் மக்களிடம் அதிக வாக்குகளை பெற்ற நான் சேவை செய்யவேண்டியது ஜனநாயக உரிமை. அவ்வாறு செய்யாமல் இருக்க முடியாது. மாகாணசபை உறுப்பினராக இருந்தபோதும் மக்களுக்கான சேவையை செய்துகொண்டே இருந்தேன்.

அரசியில் அரங்கில் இருந்து நான் வெளியேறிவிடமுடியாது. அரசியல் நோக்கத்தோடு இருந்து அரசியலுக்கு வந்தவள் அல்ல. நான் அரசியல்போராளியாக இருக்க முடியுமே தவிர அரசயில்வாதியாக இருக்கமுடியாது. இவ்வாறான நிலையில் நான் மாட்டேன் மாட்டேன் என்கின்ற போது தான் இல்லை நீங்கள் அரசியலுக்கு வந்து உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவவேண்டும் என்றார்கள்.

இப்போதுதான் நான் அரசியலுக்கு வந்தேன் வெற்றியீட்டினேன். ஆனால் வெற்றயீட்டிய பெண்களை தூக்கியெறியவேண்டும் ஓரங்கட்டவேண்டும் என்ற எண்ணப்பாடு தற்போது இருக்கின்றது.

ஆனாலும் 30 வீதமான பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற பிரசாரத்தினை நான் செய்து வருகின்றேன். 52 வீதமான பெண்கள் உள்ள இடத்தில் 50 வீதமான பெண்களாவது அரசியலுக்குள் வரவேண்டும். நான் ஒரேயொரு பெண்ணாக இருந்துகொண்டு இந்த அரசியலுக்குள் எவ்வாறு நெருக்குதல் படுகின்றேன். ஒடுக்கப்படுகின்றேன் என்பது எனது வேதனையான குரல். ஆகவே பெண்கள் அதிகளவில் அரசிலுக்குள் வரவேண்டும். அப்போதுதான் பலமாக இருக்கும்.

வெற்றியீட்டும் பெண்கள் என்றால் அரசியல் தலைமைகளுக்கு பயம். தங்களுடைய ஆசனம் அடிபட்டுப்போய்விடும் என்பதனால் தோற்றுப்போகின்ற அல்லது மௌனமாக இருந்து தலையாட்டும் பெண்களை அரசியலுக்குள் கொண்டு வர அவர்கள் தயாராக இருப்பார்கள். ஆகவே கிராமங்களில் இரந்து மக்களுக்கு சேவை செய்யும் பெண்கள் அரசியலுக்கள் வரவேண்டும் என தெரிவித்தார்.

You might also like