யாழில் கடனை வசூலிக்கச் சென்றவர்களால் குழப்பம்

யாழ்ப்பாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் கடனை வசூலிக்க நேற்றிரவு, வாடிக்கையாளரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் சாவகச்சேரி, கிராம்புவில் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில், சாவகச்சேரி , கிராம்புவில் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கடனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்.

அதற்காக ஒவ்வொரு வாரமும் 2000 ரூபாவினை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் நேற்று குறித்த வங்கியிடம் கடன் பெற்றவர் வாராந்த பணத்தினை செலுத்த முடியாத சூழ்நிலையில், அதனை இன்றைய தினம் செலுத்துவதாக கூறியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத நிதி நிறுவன ஊழியர்கள் இருவர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு நேற்று இரவு சென்று தகாதவார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு குழப்பமான சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

நிதி நிறுவன ஊழியர்கள் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு செல்ல முடியாது என்று வட மாகாண சபை சட்டம் அமுல்படுத்திய பின் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

You might also like