பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்கு எதிரான மனு நிராகரிப்பு!

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் கையேற்கப்பட்டதை எதிர்த்து பொதுமகன் ஒருவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பிரதேசத்தைச் சேர்ந்த நடராஜா குணசேகரம் என்பவர் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை மற்றும் 1990களில் இருந்து அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தான் உள்ளிட்ட மூவாயிரம் பேர் இடத்துக்கிடம் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ நேர்ந்துள்ளதாகவும்,

அத்துடன் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் குறித்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டிருப்பதாகவும்,

எனவே காணி கையகப்படுத்தலை தடை செய்து பொதுமக்களின் காணிகளை திரும்ப வழங்குமாறு உததரவிடக் கோரி இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் பதில் மனுதாக்கல் செய்திருந்த இராணுவத்தளபதி குறித்த பிரதேசம் பாதுகாப்பு ரீதியாக முக்கியமான பிரதேசம் என்றும்,

காணி கையகப்படுத்தல் நடவடிக்கைகள் நல்லதொரு நோக்கத்திற்காக காணி கையப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் முறைப்படியே கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து முறைப்பாட்டாளர் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதை சரிவர நிரூபிக்கவில்லை என்று தெரிவித்து உச்சநீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்துள்ளது.

You might also like