அமைச்சு தொடர்பில் புளொட்டுக்குள் எந்த முரண்பாடும் இல்லை. எனது பதவியையும் இராஜினாமா செய்யத் தயார்

அமைச்சு தொடர்பில் புளொட்டுக்குள் எந்த முரண்பாடும் இல்லை. எனது பதவியையும் இராஜினாமா செய்யத் தயார் என வடமாகாண சபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு அமைச்சரவை விவகாரம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை மாற்றத்தின் போது புளொட் அமைப்புக்குள் கருத்து முரண்பாடு காணப்படுவதாகவும், அமைச்சர் பதவி ஒன்றினை நான் கோரி இருந்ததாகவும் பத்திரிக்கைகளில் ஞாயிற்றுக் கிழமை செய்தி வெளியாகி இருந்தன.

இவ் அமைச்சரவை நியமனத்தின் போது, ஆரம்பத்திலே முதலமைச்சர் தரப்பினரால் என்னிடம் விவசாய அமைச்சு பதவியை ஏற்று கொள்வீர்களா? என்று கேள்வி ஏற்பட்ட போது அதனை நான் மறுத்தேன்.

காரணம் இன்று இந்த மாகாண சபையில் முறைகேடுகள் சம்பந்தமாக முதன்முதலில் இந்த பிரச்சனையை கொண்டு வந்தவன் என்ற அடிப்படையில், அது விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டு கௌரவ முதலமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்ட பிற்பாடு அதே பதவியில் அமர்வது என்பது ஏதோ நான் திட்டமிட்டு அந்த பதவிக்காக நானே செய்தேன் என்று வீண் பழி வந்து விடக்கூடாது என்பதற்காக நான் அதை மறுத்திருந்தேன்.

இருந்தும் அமைச்சரவை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை முதலமைச்சருக்கு ஏற்பட்டதன் பின்னர், அதிலும் குறிப்பாக வவுனியா மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்துகின்ற சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களின் ராஜினாமா கடிதத்தை வழங்கியதன் பிற்பாடு வவுனியாவில் இருக்கின்ற பொது அமைப்புகள், ஆதரவாளர்கள், நண்பர்கள், இயக்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வவுனியா மாவட்டம் அமைச்சு பதவியை இழந்து விடக்கூடாது என என்னை தொடர்ந்தும் வற்புறுத்தி வந்ததன் அடிப்படையில்,

என் மீது வீண்பழி வந்து விடக்கூடாது என்பதற்காக நான் முதலமைச்சருக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது எனக்கு ஒரு அமைச்சு பதவி தருவதாக இருந்தால் நான் அதை ஏற்றுக்கொள்வேன் என்ற சம்மதத்தை எங்கள் உறுப்பினர்கள் மற்றும் தலைமையிடம் தெரிவித்த பின்னரே, நான் எனது சம்மத கடிதத்தை வழங்கியிருந்தேன்.

இதில் உண்மையான எனது நோக்கம் வவுனியா மாவட்ட சிங்கள குடியேற்றங்கள், நில அபகரிப்பு போன்ற பல்வேறு நெருக்கடிக்குள்ளே இருக்கின்றபடியால் வவுனியா மாவட்டத்திற்கு ஒரு அமைச்சு வேண்டும் என்ற நோக்கத்திலே தான், நான் இதனை கூறி இருந்தேன்.

இதிலே என்னை பொறுத்தவரையில் மாகாண சபை சரியாக இயங்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக இயங்க வேண்டும், இந்த மக்களுக்கு எங்களால் முடிந்தளவு ஒரு நிரந்தரமான தீர்வையும் அதே போன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனையை தவிர என்னிடம் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை.

இருந்தாலும் என்மூலம் இந்த மாகாண சபை அமைச்சர்களின் பிரச்சனை ஏற்று நடைபெற்று கொண்டிருந்த நிகழ்வுகளுக்கு இறுதியாக என்னால் சொல்ல கூடிய ஒரு விடயம் எங்களுடைய புளொட் தலைமையும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் நான் அமைச்சு பதவியை என்னுடைய தனிப்பட்ட நோக்கத்திற்க்காகவே பெற்றுக்கொள்ள விரும்பினேன் எனக் கருதினால், அவர்கள் எனக்கு ஒரு உத்தரவாதம் தருவதாக இருந்தால், அதாவது என்னுடைய உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்யும் போது அதனை என்னுடைய கட்சியின் அடுத்த நிலையில் இருக்கின்ற க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களுக்கு வழங்குவார்கள் என்ற உறுதிமொழியை தந்தால் நான் இந்த மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்தும்கூட உடனடியாக ராஜினாமா செய்ய தயாராக இருக்கின்றேன் என்பதை கூறிக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

You might also like