கிளிநொச்சியில் சிக்கலில் சிக்கியுள்ள மின் பாவனையாளர்கள்!

கடந்த பத்து மாதங்களுக்கு மேல் கிளிநொச்சியில் பல பகுதிகளில் மின் பாவனை வாசிப்புக் கட்டணப்பட்டியல்கள் வழங்கப்படாதமையால் மின் பாவனையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டு மாதாந்தம் மின் வாசிப்பு கட்டணப்பட்டியல்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குப்பின்னர் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மின் கட்டணப்பட்டியல்கள் வழங்கப்படவில்லை.

இதனால் மாதாந்தம் குறைந்தளவு வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் குடும்பங்கள் பத்து மாதங்களுக்குப்பின்னர் மின்கட்டணப்பட்டியல்களை வழங்கும் போது, அதற்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

குறிப்பாக மாதாந்தம் அனுப்பவேண்டிய மின்கட்டணத்தை மூன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது அனுப்பியிருந்தால் அவற்றை ஒரளவு செலுத்தியிருக்க முடியும்.

இவ்வாறு ஒரு வருடங்களிற்கு இந்தப்பட்டில்களை அனுப்பாமல் விட்டு ஒரே தடவையில் அனுப்பும் போது அதிகூடிய பணத்தொகையினை செலுத்தமுடியாத நிலை ஏற்படுமென்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மின்சார சபையில் ஏற்பட்ட ஆளணி வெற்றிடத்தால் குறித்த பட்டியல்களை வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் எதிர்காலத்தில் அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் மின்சார சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like