கிளிநொச்சியில் வீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சருக்கு கடிதம்

200 வரையான குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட போது வராத சட்டம் 16 குடும்பங்களுக்கான வீடுகளை அமைக்கும் போது எவ்வாறு வந்தது என பெரியபரந்தன் கிராம அபிவிருத்திச் சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பெரியபரந்தன் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 16 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் நிறுத்தப்பட்டமை தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களுக்கு பெரியபரந்தன் கிராம அபிவிருத்திச் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்திலேயே குறித்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில்,

காணிகள் அனைத்தும் வயல் காணிகள் எனவும் இதில் நிரந்தர வீடு கட்ட முடியாது என்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் அறிவிக்கப்பட்டது.

கடந்த காலத்தில் எமது கிராமத்தில் இதே வயல் நிலங்களில் வாழ்ந்த சுமார் 200 வரையான குடும்பங்களுக்கு அரசின் வீட்டுத்திட்டம் கிடைக்கப்பெற்று வீடுகளையும் முழுமையாக அமைத்து முடித்துள்ளனர்.

எனவே இதன்போது நடைமுறைக்கு வராத சட்டம் இந்த 16 குடும்பங்களுக்கு மாத்திரம் எவ்வாறு வந்தது?

இதேபோன்று வேறு கிராமங்களிலும் இவ்வாறான நிலங்களில் வாழ்கின்ற மக்கள் தற்போது வீட்டுதிட்டங்களை பெற்று வீடுகளை அமைத்து வருகின்றனர்.

மீள்குடியேற்ற மக்களின் நலன்களிலும் அவர்களின் வீட்டுத்திட்ட விடயத்திலும் மிகவும் கரிசனையோடு செயற்பட்டு வரும் தாங்கள் எமது கிராம மக்களின் மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டத்தினை தாமதிக்காது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடிதத்தின் பிரதி மாவட்ட அரச அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like