கிளிநொச்சி வைத்தியசாலை புதிய கட்டிடத் தொகுதிகள் முதலமைச்சரால் திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டிடத் தொகுதி மற்றும் வைத்தியர்களுக்கான புதிய விடுதிகள் என்பன வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 17.3 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்ட நிதியில், 6.15 மில்லியன் ரூபா நிதியில் மனநல மருத்துவ பிரிவு கட்டிடத் தொகுதியும், 7.80 மில்லியன் ரூபா நிதியில் ஆறு தொகுதிகளைக் கொண்ட வைத்தியர்களுக்கான விடுதியுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சேவையினை விரிவுபடுத்தும் வகையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், குறித்த இரண்டு கட்டிடத் தொகுதிகளையும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் வடமாகாண சுகாதார அமைச்சரும் வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் வடக்கு முதலமைச்சருடன், சுகாதார அமைச்சர் குணசீலன், முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன், மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம் தவநாதன், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் மைதிலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like