செப்.1 முதல் அமுலுக்கு வரும் பொலித்தீன் தடை சாதகமா, பாதகமா ??

கடைக்கு நாம் பைகளை எடுத்துச் செல்வதில்லை. அதுதான் இருக்கவே இருக்கிறது சொப்பிங் பை.

அத்துடன் உணவுக்காக நாம் கரியரை தூக்கிச் செல்ல வேண்டியதில்லை. அதற்காகவே லஞ்ச் சீற், ரெஜிபோர்ம் பெட்டிகள் உள்ளனவே!

கைவீசிக் கொண்டு கடைக்குச் சென்று, கைநிறைய பொருட்களை பொலித்தீன் பைகளில் போட்டுக் கொண்டு வந்து விடுகிறோம். இக்கலாசாரத்துக்கு பழகியும் விட்டோம்.

இப்படியே நாற்பது வருட காலமாகப் பழகிப் போன ஒன்றை செப்டம்பர் முதல் திகதியிலிருந்து ஒரேயடியாக விட்டுவிட முடியுமா?

வியாபாரிகள், நுகர்வோர் மத்தியில் அடுத்ததாக என்ன செய்வது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

வாழ்வை இலகுவாக்க அறிமுகமாகிய பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையானது இன்று மனித வாழ்வின் முக்கிய தேவையாக மாறி விட்டது தான் பிரச்சினைக்கே அடிப்படை.

பெரும்பாலும் கணவன், மனைவி தொழிலுக்குச் செல்வதால் அன்றாட உணவை கடையிலேயே வாங்கிச் சாப்பிட வேண்டிய சூழல் இன்று காணப்படுகிறது.

உணவகங்களில் உணவு வகைகள் லஞ்ச் சீற்றில் பொதி செய்யப்படுகின்றன. கறிவகைகள் அனைத்தும் சிறுசிறு சொப்பிங் பைகளிலிட்டே பொதியிடப்படுகின்றன. சிலர் தேநீரைக் கூட பொலித்தீன் பைகளில் வாங்கிச் செல்கின்றனர்.

எனவே நாம் அறியாமலேயே பொலித்தீன், பிளாஸ்டிக்கினால் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி விட்டோம்.

இத்தவறை குப்பை மேடு சரிவினூடாகவே நாம் உணர்ந்து கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இப்பின்னணியிலேயே பொலித்தீன் தடையினை அறிவித்துள்ளது அரசாங்கம்.

இதனை தடை செய்வதால் முதல் கட்டமாகப் பாதிக்கப்படுவது பொதுமக்கள் என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.

இன்றைய மக்களின் அவசர தேவைக்கு ஆபத்பாந்தவனாக வந்து நிற்பது பொலித்தீன், சொப்பிங் பைகளே!

இத்தடைக்கு எதிராக கடந்த 21 ஆம் திகதி கொழும்பு வீதிகளில் பலர் தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

பொலித்தீன் தடை குறித்து பொலித்தீன் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சிறிதர் இவ்வாறு கூறுகிறார்.

பொலித்தீன் தடையை நாம் இலங்கையர் என்ற ரீதியில் ஆதரித்தாலும், இந்தத் தடைக்கான காலவரையறை போதுமானதல்ல. எமக்கு இன்னும் நான்கு வருடங்கள் கிடைக்குமானால் இந்நிலைமையை சுமுகமாக மாற்றியமைக்கலாம்.

அத்துடன், நாம் அரசுக்கு வரி செலுத்துகிறோம். மேலும் வங்கிக் கடன் வாங்கியே இத்தொழில் முயற்சிகளை மேற்கொள்கிறோம். அரச அதிகாரிகள் இதற்கான மாற்றுத் திட்டத்தினை முன்வைக்கவில்லையே!

இத்தொழிலை நம்பி பலர் வாழ்கின்றனர். உக்கிப் போகக் கூடிய பைகளை பயன்படுத்துமாறு கோருகின்றனர். ஆனாலும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வரவில்லை.

அரசு இத்தடைக்கு முன்பாக பொலித்தீன் தீமை குறித்து விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தால் நாளடைவில் பொலித்தீன் பாவனை குறைந்திருக்கும் என்று தனது கவலையையும் ஆதங்கத்தையும் வெளியிட்டார்.

மூன்றரை லட்சம் பேர் பொலித்தீன் தொழில் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபடுகின்றனர். சுமார் ஆயிரம் பேர் நேரடியாக சம்பந்தப்படுகின்றனர்.

இத்தடைக்கான சலுகைக் காலம் எதிர்வரும் ஜனவரியில் முடிவடையும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் 2018 வரை நீடிக்கக் கூடிய காலம் அவகாசம் வழங்கப்படலாம் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.

பொலித்தீன் தயாரிப்பாளர் சார்பில் சுனில் எம்முடன் பேசினார். சுமார் நாற்பது வருடங்களாக இத்துறையில் இருக்கிறேன். கடந்த காலத்தில் 20 மைக்ரோனுக்கு மேலான பொலித்தீனை உற்பத்தி செய்யும்படி கோரிக்கை விடுத்தது அரசு. அதனை நடைமுறைப்படுத்தினோம். திடீரென பாவனை தடையென்றால் என்ன செய்வது?

அதேநேரம் குறைவான அடர்த்தி கொண்ட பொலித்தீன் (LDPE) பயன்பாடு குறித்து கருத்து வந்துள்ளது. அது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மாற்றுத் திட்டத்திற்கு நாம் தயார். அதனை அரசாங்கம்தான் அறிவிக்க வேண்டும். நாம் நிறுவிய இயந்திரங்களை ஒரேடியாக கைவிட முடியாது. இவற்றின் மீது நாம் பல லட்சம் ரூபாவை முதலீடு செய்துள்ளோம் என்கிறார் சுனில்.

வீட்டுக் கைத்தொழிலாக உணவுப் பார்சல் விற்பனை செய்பவர்கள் இந்த பொலித்தீனை நம்பியே வாழ்கின்றனர். இவர்களுக்கு ஒரு மாற்றுத் திட்டம் அவசியம்.

பொதுச்சந்தைகளில் அல்லது சுப்பர் மார்க்கெட்டில் கூட சொப்பிங் பாக் பாவனை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. எப்பொருளை வாங்கினாலும் அதனூடாக சொப்பிங் பாக் ஊடாகவே அது நம் கைக்கு வந்து சேர்கிறது.

பொலித்தீன் பாவனை என்பது நமக்கு புலிவாலை பிடித்தவன் கதை போலாகி இருக்கிறது.

வருடாந்தம் 113,500 மெற்றிக் தொன் பொலித்தீன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக 2 பில்லியன் செலவிடப்படுகிறது.

அத்துடன் தனிநபருக்கான வருடாந்த பாவனை 5.71 கிலோவாக மதிப்பிடப்படுகிறது. குப்பைக் கழிவுகளில் 10% முதல் 15 % வரை பொலித்தீன் கழிவுகளே காணப்படுகின்றன.

நாளாந்தம் 200,000 லஞ்ச் சீற்றும், 150,000 பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

பொலித்தீன் மீள்சுழற்சியில் ஈடுபடும் நவஜீவனை சந்தித்தோம். இந்தத் தடையினால் மீள்சுழற்சியாளருக்கு பாதிப்பு இல்லை. ஆனாலும் பொலித்தீன் பாவனையை மட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தே அரசு இத்தடையை விதித்திருக்கிறது என்றார் இவர்.

இவற்றின் நேரடி மற்றும் மறைமுக பின்விளைவுகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய கட்டாய நிலை எமக்கும் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ளது.

இன்று சொப்பிங் பாக், லஞ்ச் சீற்றை நம்பி வாழ்வதை விட்டு, புதிய நுகர்வு கலாசாரத்தை நோக்கிச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

பொது வைபவங்களில் பயன்படுத்தும் பொலித்தீனை பொது இடங்களில் எரிப்பதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியதாயினும் மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் மக்களை விழிப்பூட்டத் தவறியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது என்றார் இவர்.

தடை செய்யப்பட்ட இவற்றுக்கு மாற்றீடாக எதைக் கொண்டு வரப் போகிறார்கள் என்று தெரியவரவில்லை. அதுவரை பொதுமக்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனாலும் பொதுமக்கள் அதிருப்தியடையும் போது அரசாங்கத்தின் திட்டம் தோல்வியில் முடிவடையலாம்.ஆனாலும் மாற்றுத் திட்டத்திற்கான வழிவகைகளை உடனடியாக உருவாக்க வேண்டும்.

அத்துடன், மாற்றுத் திட்டங்கள் குறித்து அரச அதிகாரிகள் உடன் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் மௌனிகளாக இருக்க முடியாது.

ஆனாலும் நாமும் நமக்கும் ஒரு தேசிய கடமை உள்ளது. அது நமது பிரச்சினைகளை நாம் சந்த்தியினருக்கும் விட்டுச் செல்லாதிருப்பது.

பொலித்தீன்,சொப்பிங் பாக் வகைகளை அடுத்த சந்த்தியினருக்கு விட்டு செல்லாதிருப்போம்.

You might also like