வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியாவில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (30.08.2017) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்  ஒன்றினை முன்னெடுத்ததுடன் பேரணி ஒன்றினையும் மேற்கொண்டனர்.

இன்று (30.08.2017) காலை 11.30 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டும் 188ஆவது நாளையும் முன்னிட்டு வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாட்டினை மேற்கொண்டபின்னர் கோவிலில் இருந்து மணிக்கூடு வீதியூடாக ஏ9 வீதி வழியாக பேரணியாக வந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் இடத்திற்கு வருகை தந்தனர். அவ்விடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூறும் முகமாக கவிதைகள், நினைவுரைகள் ஆற்றப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின பிரகடனம் கீழ் வருமாறு

1.இனப்படுகொலையின் காரணமாகவே தமிழர் காணாமல் ஆக்கப்பட்டனர். எனவே அவர்களின் உறவுகள் சிங்களவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவதனை நாம் விரும்பவில்லை. தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை ஓர் இனப்படுகொலை ஆனால் சிங்களவர்கள் காணாமல் ஆக்கப்பட்டது அரசு தன்னைப் பாதுகாக்கவே

2. சிங்கள அரசு ஒருபோதும் தமிழர்களுக்கு நீதியையோ தீர்வையோ கொடுக்கவில்லை. தமிழர்களுக்கு எதிராக குற்றம் புரிந்த எந்த சிங்களவர்களையும் தண்டிக்கவும் இல்லை. காணாமல்ப்போன எவரையும் மீட்டும் தரவில்லை. காணமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமானவர்களை ஒருபோதும் தண்டிக்கப்போவதும் இல்லை. எனவே அமெரிக்காவும், ஜரோப்பிய ஒன்றியம் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும்

3. தொடர்ந்து காணமல் ஆக்கப்படுவதனை தடுப்பதற்கும் ஏற்கனவே ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது குடும்ப அங்கத்தவர்களது பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் ஒரு நிரந்தரமான, சுதந்திரமான அரசியல்த் தீர்வே தமிழர்களுக்குத் தேவையானதாகும். அதற்கு அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய ஒன்றியமே தீர்வை எடுத்துத்தர வேண்டும்.

இதேவேளை இன்று காலை சில அரசியல் வாதிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு போராட்டமும் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்ட இடத்தை வந்தடைந்து பின்னர் நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது.

அரசியல்வாதிகள் சிலர் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை திடீரென தாங்கள் கொண்டாடுவதற்கு இந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் அழைத்திருந்தார்கள். இவர்கள் தெருவிலே படுத்துறங்கி இவ்வளவு வேதனைபட்டுகொண்டிருகின்ற எங்களுடைய தமிழ் அரசியல் வாதிகளே இந்த மக்களோட இணைந்து இந்த போராட்டத்தை செய்வதைவிட்டு  தனியே அந்த போராட்டத்தை செய்வது மக்களிடையே மன வேதனையை கொடுத்திருக்கின்றது. இப்படியான விடயம் ஆரோக்கியமான விடயமில்லை. இவர்களே இப்படி செய்தால் அரசிடம் இருந்து நீதியை நாங்கள் எப்படி எதிர்பார்ப்பது. என்பதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கேள்விஎழுப்பியுள்ளனர்.

You might also like