துணுக்காயில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்து சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவு – துணுக்காயில் இருந்து, கிளிநொச்சி – அக்கராயன் வழியாக, யாழ்ப்பாணம் வரையில் பேருந்து சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும், ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பேருந்து சேவைகள் நடைபெற்று வந்தன.

இருப்பினும் அக்கராயனில் துணுக்காய் பேருந்து தரிக்கக் கூடாது என கிளிநொச்சி தனியார் பேருந்து சங்கத்தினர் அறிவித்த நிலையில் மேற்படி வழித்தடத்தில் நடைபெற்ற பேருந்து சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக இடம்பெறவில்லை.

இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு மேற்படி கிராமங்களின் பொது அமைப்புகள் மனுக்களை கையளித்த போதிலும், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட போதிலும் மேற்படி கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து இடம்பெறவில்லை.

வட மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியும் பயனில்லை. எனவே குறித்த பேருந்து சேவைகளை நடத்துவதற்கு வட மாகாண போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த பேருந்து சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாத நிலையில் குறித்த பாதையூடாக போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like